மிகக் குறைந்த தொகை லஞ்சம் வாங்கிய நபர் கைது
இலங்கை வரலாற்றில் 125 மில்லியன் ரூபாய் எனும், அதிக தொகையினை லஞ்சமான பெற்றுக் கொண்ட சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட செய்தி இலங்கையில் பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் நிலையில், தற்போது, இந்தியாவில் மிகவும் குறைந்த தொகையொன்றினை லஞ்சமாகப் பெற்ற அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 30 ரூபாய் லஞ்சம் வாங்கியபோதே, இந்த நபர் கைதாகியுள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநிலத்தின் ஜல்கான் பகுதியிலுள்ள மாவட்ட வருவாய் அலுவலகத்தில் லிகிதராகப் பணியாற்றிவரும் 57 வயதுடைய பிரதாப் சிங் பாபு என்பவர், மாணவர்கள் மூவரிடம் லஞ்சமாக மேற்படி தொகையினைப் பெற்றுக் கொண்டபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது;
தமக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காக, மாணவர்கள் மூவர் மேற்படி மாவட்ட அலுவலகத்துக்கு வந்துள்ளனர். இந்த நிலையில், அங்கு லிகிதராகக் கடமையாற்றும் பிரதாப் சிங் பாபு என்பவர், சான்றிதழை வழங்குவதாயின் ஒவ்வொருவரும் 100 ரூபாய் வீதம், மூவரும் 300 ரூபாய் வழங்க வேண்டுமென கேட்டுள்ளார். ஆயினும், மாணவர்கள் பேரம் பேசி 30 ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து, தம்மிடம் லஞ்சம் கேட்ட லிகிதர் குறித்து, ஜல்கான் மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி மூலமாக மேற்படி மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில், மாணவர்களைத் தொடர்பு கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், குறித்த லிகிதருக்கு பணத்தைக் கொடுக்க வைத்துக் கைது செய்தனர்.
ஏற்கெனவே, 2006 ஆம் ஆண்டு 400 ரூபாய் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில், மேற்படி பிரதாப் சிங் பாபு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது இந்தியாவிலேயே மிக குறைவாக 30 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, இவர் கைதாகியுள்ளார்.
இதற்கு முன்னர், 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் துளே மாவட்ட நீதிமன்றத்தில் லிகிதராகப் பணியாற்றிய ஒருவர், 50 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டிருந்தார்.