ஜனாதிபதித் தேர்தல்: ரணிலின் தந்திரம் என்ன? அலசுகிறார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிம்

🕔 September 18, 2019

க்கிய தேசிய முன்னணியின் இழுபறிக்குள்ளாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் புதைந்துள்ள படிப்பினைகளை ஆராய்வது சிறுபான்மையினர் பற்றிய ரணிலின் அபிலாஷைகளைப் புரிந்து கொள்ள உதவும்.

2005 ஆம் ஆண்டு ஜனாபதித் தேர்தல் தோல்விக்குப் பின்னர், ரணிலின் வியூகங்கள் வேறு தளங்களிலே நகர்கின்றன. நிறைவேற்று அதிகாரம் தனக்கில்லாவிட்டாலும் தனது கட்சிக்கு கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தாலும் தன்னை மீறிய செல்வாக்கு எவரிடமும் சென்று விடக்கூடாது. ஒட்டு மொத்தமாக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை கட்சியின் தலைவர் சோனியா காந்தி வழிநடத்திய தளத்தில், கட்சியை நகர்த்துவதே ரணிலின் திட்டமும் விருப்பமும்.

இந்த விருப்பத்துக்கு இசைந்து செல்லும் வேட்பாளரைக் கொண்டுவருவது, இல்லாவிட்டால் கடைசித் தடவையாகப் போட்டியிடுவது. இதுதான் திட்டம்.

கூட்டணிக் கட்சிகளின் உறவை வைத்து திட்டத்தை கச்சிதமாகக் கையாள வேண்டியதுதான் என்றிருந்தார் ரணில். ஆனால் இதையெல்லாம் தூக்கி எறிந்து, வீறு நடைபோட்டு வெற்றிக் கொடி நாட்டப் புறப்பட்ட சஜிதின் போக்குகள் ரணிலின் பிராண வாயுவுக்குள் பொறியாக மாட்டிக் கொண்டது.

தலைமையை மீறி சஜித் நடத்திக் காட்டிய கூட்டங்கள், பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கைகள் எல்லாம் தன்னால் சோனியா காந்தியாக ஐக்கிய தேசிய முன்னணியை வழி காட்ட முடியாது என்பதை ரணில் உட்பட அவரின் சகாக்களுக்கு உணர்த்தியிருக்கும்.

ஏற்கனவே கொண்டு வந்த வேட்பாளரும் வளர்த்த கடா மார்பில் மோதியவாறு அதிகாரத்தைப் பாவித்து விட்டார்.மற்றொரு கடாவும் மார்பிலேற விடுவதா? இந்தக்கடா மார்பில் மட்டுமல்ல கூட்டையே கொளுத்திவிடும் போலுள்ளதே? விடக் கூடாது. ஏவிவிடப்பட்டன தோழமைக் கட்சிகள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழர் முற்போக்கு முன்னணிக் கட்சிகளுடன் பேச வேண்டும். அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும். பரந்த கூட்டணியை அமைக்க வேண்டும். இத்தனையும் செய்தால் வேட்பாளருக்குப் பொருத்தம்தான்.

முழு வீச்சுடன் பந்தை எறிந்து ஒதுங்கிய ரணில் பெறுறேுகளைப் பார்த்து நிற்கிறார். ஒரு வகையில் சஜிதின் திமிர்த்தனத்துக்கு போடப்பட்ட மூக்கணங் கயிறுதானிது. பங்காளிக் கட்சிகள் எதையும் கேளாது எவ்வாறு தன்னைத் தானே வேட்பாளர் எனக் கூற முடியும்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தோழமைக் கட்சிகள் ராஜபக்‌ஷ அணிக்குச் செல்லாது என்ற நம்பிக்கை சஜிதுக்கு எப்படி வந்தது. இக்கட்சிகள் இல்லாதும் வெல்ல முடியுமென்ற நம்பிக்கையிலா? சஜித் இப்படித் துள்ளுவது.

ராஜபக்‌ஷ அணியிலுள்ள கடும்போக்கு முகாம்களே முஸ்லிம்களின் வாக்குகளுக்காக இரட்டை நாக்குகளை அடக்கிக் கொள்கையில், சிறுபான்மையினரைப் பொருட்படுத்தாத போக்கு சஜித்துக்கு எங்கிருந்து வந்தது. இதற்கு விடை காண விரும்பியே இப்பந்து எறியப்பட்டுள்ளது. இந்த விடைகளில் தோழமைக் கட்சிகளும் சிலவற்றைப் புரியலாமென ரணில் நினைக்கிறார்.

இப்போதே துள்ளும் சஜித், அதிகாரம் வந்தால் எப்படித்துள்ளுவாரென்ற ஐயத்தை சம்பந்தன், ஹக்கீம், றிஷாட், மனோ, ஆகியோரின் மனக்கண்கள் முன் ஓடவிடுவது, தாராளத் தன்மையில்லாத தலைமைகளால் சிறுபான்மையினர் அனுபவித்த கஷ்டங்களை இத்தலைமைகளுக்கு ஞாபகமூட்டுவது, இத்தந்திரங்களும் எறியப்பட்ட பந்தில் மறைந்துள்ளதாகவே தோணுகிறது. இதுதான் ரணிலின் ராஜதந்திரம். இதில்தான் ரணிலின் இரட்டை இலக்குகள் பளிச்சிடுகின்றன.

சிறுபான்மையினரின் அபிலாஷைகளை வென்று கொடுப்பது, நம்பி வந்த சமூகங்களை நட்டாற்றில் விடாது பாதுகாப்பது, ஐக்கிய தேசிய கட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளைத் தக்க வைப்பது என்பவை ஒரு திட்டம். தோழமைக் கட்சிகளின் தயவைத் தொடர்ந்து பேணுவது, நிலைமைகள் நம்பிக்கை ஏற்படுத்தின் கடைசியாகப் போட்டியிட்டுப் பார்ப்பது இது இரண்டாவது திட்டம். இதற்காகத்தான் தோழமைகை் கட்சிகள் தூதாகவும்,தோதாகவும் சஜித்திடம் அனுப்பப் பட்டுள்ளன.

ஒருவாறு சஜித் போட்டியிட்டு வெற்றி பெற்றால், எல்லை மீறும் வரை கட்சியை வழிநடத்திப் பார்ப்பார். எல்லை மீற முயற்சித்தால் தோழமைக் கட்சிகளின் உதவிகள் நாடப்பட்டு ஜனாதிபதியின் எஞ்சியுள்ள அதிகாரங்கள் பிடுங்கப்படலாம். இதற்கு 150 ஆசனங்கள் தேவையே எங்கிருந்து பெறுவார் ரணில்? எதிரணியிலுள்ள ராஜபக்‌ஷக்கள் எதற்காகவுள்ளனர். தங்களுக்கு இல்லாதது சஜிதுக்கா? என்ற சிலரின் மன நிலைகள், ரணிலின் இரட்டை இலக்கில் ஒன்றை வெற்றி கொள்ளச் செய்யலாம். மறுபுறம் ராஜபக்‌ஷக்களின் தந்திரங்களும் எல்லை மீறலாம். இங்கு பேசப்பட்டது ரணிலின் இரட்டை இலக்குகள் பற்றியவை மட்டுமே.

தென்னிலங்கையின் அரசியல் தடுமாற்றங்கள் தணியும் வரை, தற்போதைக்கு எந்த அணி வெல்லும் என்பதை ஆரூடம் கூற முடியாதுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்