ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தனக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக, கரு ஜயசூரிய தெரிவிப்பு

🕔 September 18, 2019

னாதிபதி வேட்பாளராக தன்னை களமிறங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

தேரர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் புத்தி ஜீவிகள் உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்காக நம்பிக்கை மிகு தலைமைத்துவம் நாட்டுக்குத் தேவை என்பது, அனைத்துத் தரப்பினரதும் பொதுவான கோரிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் வலியுறுத்திவரும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் செய்யும் விடயத்தை நோக்காகக் கொண்ட அரசியல் சக்திகளுடன் இணைந்தே, இந்தக் கோரிக்கையை கவனத்தில் கொள்ள முடியும் என்றும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவதாக இருந்தால், கட்சியின் யாப்புக்கு அமைய அனைத்துத் தரப்பினரின் ஆசிர்வாதத்துடனேயே அது இடம்பெற வேண்டும் எனவும், தனது அறிக்கையில் கருஜய சூரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கட்சி மாறி அமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொண்ட கரு ஜயசூரிய, பின்னர் தனியாக ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்