புலிகள் குறித்து அப்படிக் கூறவேயில்லை; ஊடகங்களில் வெளியானவை உண்மைக்கு புறம்பானது: முத்தையா முரளிதரன்
“தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே, தனது வாழ்க்கையில் மிக முக்கியமான நாள்” என, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.” என, கிறிக்கட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிறன்று நடைபெற்ற, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முரளிதரன் உரையாற்றிய போது, “புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாள்தான் தனது வாழ்க்கையில் முக்கிய நாள்” என்று கூறியதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இது குறித்து முரளியிடம் பிபிசி வினவிய போது; அவ்வாறு தான் கூறியதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழன் என்ற விதத்தில் தான் அச்சத்துடனேயே ஒரு காலப் பகுதியில் வாழ்ந்து வந்ததாக” தனது உரையில் கூறியதாகவும் முரளிதரன் பிபிசியிடம் விளக்கியுள்ளார்
தனது வாழ்க்கையில் மிகவும் சிறந்ததொரு நாள் எது என்று கேட்டால், அது 2009ஆம் ஆண்டு (போர் நிறைவடைந்த ஆண்டு) என்றுதான், அவர் நேற்றைய உரையில் கூறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் காணப்பட்ட அச்ச சூழ்நிலை, இல்லாது செய்யப்பட்ட ஆண்டே அது என்றும் அவர் சுட்டிக்காட்டிருந்தார்.