சஹ்ரான் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கும் 97 அறிக்கைகளை, 2016ஆம் ஆண்டு முதல் புலனாய்வு பிரிவு வழங்கியுள்ளது
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் காசிம் உள்ளிட்ட குழுவினர் தொடர்பிலான 97 அறிக்கைகள், 2016ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி வரை, அரச புலனாய்வு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகள் அனைத்தும் போலிஸ் மாஅதிபர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இன்று கொண்டு வந்தார்.
ஈஸ்டர் தாக்குதலை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க தவறியமையின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் 07 நீதியரசர்கள் அடங்கிய குழு முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்திலேயே மேற்படி விடயத்தை ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன, உச்ச நீதிமன்றத்தில் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
இந்த அறிக்கைகளின் ஊடாக தாக்குதலொன்று நடத்தப்படுவதற்கான திட்டம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிலந்த ஜயவர்தனவினால் முன்வைக்கப்பட்ட உறுதிமொழிக் கடிதம் மற்றும் ஏனைய ஆவணங்களில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் பாதுகாப்பு விடயம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் மாத்திரமன்றி, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்திற்கு அமைய முழு அமைச்சரவையும் பொறுப்பு கூற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அதிலிருந்து தவற முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ஜயவர்தன மேலும் கூறியுள்ளார்.
07 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழுவிற்கு, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமைத் தாங்குகின்றார்.