சஹ்ரானின் மகளை, சஹ்ரானுடைய மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 September 2, 2019

– அஹமட் –

ஹ்ரானின் பெண் குழந்தையை, சஹ்ரானின் மனைவியின் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பயக்கரவாதத் தடுப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி சாதியாவுடன், அவரின் குழந்தையும் தற்போது உள்ள நிலையிலேயே, இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஏப்ரல் 21ஆம் திகதி தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், சாய்ந்தமருதில் வீடொன்றில் ஒளிந்திருந்த சஹ்ரானின் குழுவினர் மற்றும் உறவினர்களை பாதுகாப்பு தரப்பு சுற்றி வளைத்த போது, அவர்கள் தற்கொலைக் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.

ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் சஹ்ரானின் தாய், தந்தை, சகோதரன் உள்ளிட்ட 15 பேர் மாண்டனர்.

ஆயினும், மறுநாள் குண்டு வெடிப்பு நடந்த வீட்டை பாதுகாப்புத் தரப்பினர் சோதனையிட்ட போது, அங்கு காயமடைந்த நிலையில் சஹ்ரானின் மனைவி சாதியா, மற்றும் பெண் குழந்தை ருசையான ஆகியோர் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்