அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம்
மாத்தறை – அஹங்கம பகுதியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது மற்றுமொரு குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக கண்டிப்பதாகவும், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
முஸ்லீம் சமூகத்தின் குரலை எப்படியாவது அடக்கி விட வேண்டும் என்று முயற்சித்து வரும் கடும் போக்கர்கள், தற்போது மீண்டும் ஒரு இனவாத நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இதன் மூலம் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீதான உச்சக்கட்ட காழ்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளதோடு அவரை எப்படியாவது பழிவாங்க துடிப்பதையும் நிரூபித்துள்ளனர்.
அமைச்சர் ஒருவர், தமது அமைச்சின் மூலம் இடம்பெற்ற அபிவிருத்தி திட்ட நிகழ்வில் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை போடும் இந்த காட்டு மிராண்டிகளை நினைத்து வெட்கப்படவேண்டியுள்ளது.
ஜனநாயக சூழலை கேலிக்கூத்தாக்கி, சட்டம் மற்றும் ஒழுங்கை மதிக்காமல் நடந்து கொள்ளும் இனவாத மத குருமார்கள் தமது நடவடிக்கைகளை நிறுத்தாத வரை, இன ஐக்கியத்தை ஒரு போதும் ஏற்படுத்த முடியாது
அமைச்சர் றிஷாட் மீது 300க்கு மேற்பட்ட குற்றசாட்டுக்களை சுமத்தி மூக்குடைபட்ட கடும் போக்கு கூட்டத்தினர், றிஷாட் பதியுதீனின் அரசியல் வாழ்வையும் நற்பெயரையும் எப்படியாவது அழிப்பததற்கு புதுப் புது வழிகளை தேடிக்கொண்டிருப்பதை அஹங்கம நிகழ்வு புலப்படுத்துகின்றது.
தொடர்பான செய்தி: “காத்தான்குடியில் நடந்து கொள்வதைப் போல், இங்கு வேண்டாம்”: அமைச்சர் றிசாத்துக்கு எதிராக கடும் போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்