“காத்தான்குடியில் நடந்து கொள்வதைப் போல், இங்கு வேண்டாம்”: அமைச்சர் றிசாத்துக்கு எதிராக கடும் போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்
– அஸீம் கிலாப்தீன் –
மாத்தறை – அஹங்கம பகுதியில், திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் றிஷாட்பதியுதீன் விஜயம் செய்வதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை பௌத்த கடும்போக்காளர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம் விரோதக் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்ற இவர்கள்; காத்தான்குடி, கல்முனையில் நடந்து கொள்வதைப் போன்று இங்கு எவரும் நடந்து கொள்ளக் கூடாதென்றும் கூக்குரலிட்டனர்.
ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரான நிலைமைகளை அரசியல் லாபத்தித்திற்காகப் பயன்படுத்த முனையும் சில தீய அரசியல் சக்திகளே, இவர்களைத் தூண்டி ஆர்ப்பாட்டம் செய்ய வைத்ததாகவும் தெரிய வருகிறது.
அமைச்சர் ரிஷாட்பதியுதீன் இப்பகுதிக்கு விஜயம் செய்வதற்கு இரு மணித்தியாலயங்களுக்கு முன்னரே, இக்கடும் போக்கர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிலைமைகளின் விபரீதங்களை உணர்ந்து கொண்ட அமைச்சர், தனது விஜயத்தை ரத்துச் செய்ததையடுத்து, ராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன, பிரதியமைச்சர் கருணாதிலக்க பரணவித்தாரண மற்றும் அமைச்சின் அதிகாரிகளால் குறித்த ஹோட்டல் பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.
வீடியோ