இரண்டு, மூன்று நாட்களில் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார்: ரணில் உறுதியளித்துள்ளதாக ஹக்கீம் தெரிவிப்பு
ஐக்கிய தேசிய முன்னணி எனும் கூட்டணியை உருவாக்குதல் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தல் ஆகிய விடயங்களுக்கு சில நாட்களில் தீர்வை வழங்குவதாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தன்னிடம் உறுதியளித்துள்ளதாக மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட ஐக்கி தேசிய முன்னணி எனும் கூட்டணியை அமைப்பதற்கும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைப் பெயரிடுவதற்கும், ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார் என ஊடகவியலாளர்களிடம் ஹக்கீம் கூறினார்.
“முன்னணியை அமைப்பதற்கும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று, ரணில் விக்ரமசிங்கவிடம் நாம் வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு அவர், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அவற்றினைச் செய்வதாக உறுதியாளித்தார்” என்று இதன்போது ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும் மக்களின் ஆதரவைக் கொண்ட, பிரபலமான ஒரு நபரை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடும்படியும் தாம், ரணிலிடம் கோரிக்கை விடுத்ததாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
“மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, பிரபலமான ஒரு வேட்பாளரை நாம் ஆதரிப்போம்” என்றும் இதன்போது அவர் கூறினார்.