மைக்கேல் ஜாக்சன்: உலகை பிரமிக்க வைத்த இசை அரசன்

🕔 August 29, 2019

பொப் இசை உலகத்தின் அரசன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மைக்கல் ஜாக்சன் பிறந்த நாள் இன்று.

1958ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கேரி என்ற ஊரில் வாழ்ந்த குடும்பத்தில் 8-வது குழந்தையாக பிறந்தார் மைக்கல் ஜாக்சன்.

சகோதரர்களுடன் இணைந்து தன்னுடைய ஐந்தாம் வயதில் இசைப் பயணத்தை தொடங்கினார். அவர்கள் ஜாக்சன் ஃபைவ் (Jackson Five) என்று அழைக்கப்பட்டனர்.

13-வது வயதில் தனியாக பாடத் தொடங்கினார். 1984-ம் ஆண்டு வெளியான ‘த்ரில்லர்’ ஆல்பம் அவரை உலக புகழ்பெறச் செய்தது.

1987ம் ஆண்டு வெளியான ‘bad’, 1991ம் ஆண்டு வெளியான ‘dangerous’ போன்றவை, அவருடைய ஆல்பங்களில் குறிப்பிடத்தக்கவை.

மைக்கல் ஜாக்சன் தோலின் நிறம் பிறப்பின்போது கறுப்பாகவே இருந்தது. சில வருடங்கள் கழித்து அவருடைய தோல் நிறம் வெகுவாக மாறியது.

இது குறித்து பல கதைகள் பரவத் தொடங்கின. ஆனால், ஒரு தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மூக்கின் அமைப்பை மட்டுமே அறுவை சிகிச்சை செய்து மாற்றியதாகவும் ஒரு பேட்டியில் மைக்கல் ஜாக்சன் கூறினார்.

அவருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று பல முறை கூறியிருக்கிறார். முதலில் லிசா மேரி ப்ரிஸ்லி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவர்களுக்கு விவாகரத்து ஆனது.

இரண்டாவதாக டெபிரொ என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பிரின்ஸ் மற்றும் பாரிஸ் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ப்லாங்கெட் என்ற இன்னொரு மகன் இருக்கின்றார். ஆனால் அவரது தாய் யார் என மைக்கேல் ஜாக்சன் கூறியதில்லை. வாடகைத் தாய் மூலம் ப்லாங்கெட் பிறந்ததாக கூறினார்.

1993ம் ஆண்டு அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அது நீதிமன்றத்துக்கு வந்ததே இல்லை. பின்னர் 1994ம் ஆண்டு நீதிமன்றத்துக்கு வெளியே இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பின்னர், 2003ம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மைக்கல் ஜாக்சன் தன்னுடைய படுக்கையில் குழந்தைகளைப் படுக்க வைத்து கொண்டதைக் கூறினார்.

ஆனால் 2005ம் ஆண்டு மீண்டும் அவர் மேல் குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு தொடரப்பட்டது. அது நான்கு மாதத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டது.

ஆனால், அவருடைய புகழ் அதனால் குறையவில்லை. சுமார் 300 பேர் அவரின் காரை பின் தொடர்ந்து அவரை பார்க்க அவருடைய நெவர்லண்ட் பண்ணை வீடு வரை சென்றனர்.

மைக்கல் ஜாக்சன் 2009ம் ஆண்டு ஜூன் 25 அன்று அதிக மருந்து எடுத்துகொண்டதால் உயிரிழந்தார். அவர் இறந்த நாளன்று மக்கள் இந்த செய்தியை உறுதிபடுத்திக் கொள்ள தங்களுக்கு தெரிந்த அனைத்து ஊடகங்களிலும் தேடினர். அவருடைய ரசிகர்கள் மிகவும் வருந்தினர்.

2019ம் ஆண்டு ‘லீவிங் நெவர்லேண்ட் ‘என்ற ஆவணப்படம் வெளியானது. ‘டான் ப்ரீட்’ என்ற இயக்குநர் எடுத்த இந்த படம், இரண்டு இளைஞர்கள் குறித்து இருந்தது. அவர்கள் இருவரும் தாங்கள் மைக்கல் ஜாக்சனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்கள் என அவர்மீது குற்றஞ்சாட்டினர்.

அவருடைய ரசிகர்கள் இதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர்.

ஆனால், சில அருங்காட்சியகங்கள் மற்றும் பேஷன் நிறுவனங்கள் அவர் நினைவாகக் காட்சிப்படுத்தியிருந்த பொருட்களை நீக்க முடிவு செய்தன.

உலக புகழ்பெற்ற ‘ரொக் & ரோல் ஹால் ஆஃப் ஃபேம்’ அவர் எப்போதும் ஓர் இசைக் கலைஞராக நினைவில் இருப்பார் எனவும், அவருடைய நினைவுகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்