தற்கொலைக் குண்டுதாரியின் உடற் பாகங்களை மயானத்தில் அடக்கம் செய்தமை, சட்டவிரோதமானது: மட்டக்களப்பு மேயர்
சியோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவரின் உடல் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்வதற்கு, மாநரசபையின் அனுமதி பெறப்படவில்லை என்று, , மட்டக்களப்பு மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்துள்ளார்.
தமது மாநகர சபைக்குட்ட பிரதேசமொன்றில் சடலமொன்றினை அடக்கம் செய்வதாயின் அதற்காக, மாநகர சபையின் அனுமதியினைப் பெற்றுக் கொள்தல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே, குறித்த மயானத்தில் மேற்படி உடற்பாகங்கள் புதைக்கப்பட்டமையானது சட்டவிரோத நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் ஏப்ரல் 21ஆம் தேதியன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியவரின் உடற் பாகங்களை மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்தமைக்கு எதிராகவும், அந்த உடற் பாகங்களை தோண்டியெடுக்க கோரியும், அந்தப் பிரதேச மக்கள் நேற்று செவ்வாய்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
சியோன் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவர் காத்தான்குடியைச் சேர்ந்த எம்.என்.எம். ஆஸாத் என்பவராவார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த தற்கொலைத் தாக்குதல்தாரியின் உடற்பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளருக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த ஜுன் மாதம் உத்தரவிட்டது.
இதற்கமைய திங்கட்கிழமை தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத்தின் உடல்பாகங்கள் மட்டக்களப்பு – கள்ளியங்காடு இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
34 வயதுடைய தற்கொலைக் குண்டுதாரி ஆஸாத், கல்முனை, இஸ்லாமாபாத் பகுதியில் 2012ஆம் ஆண்டு திருமணம் முடித்திருந்தார். அவரின் மனைவியின் பெயர் பைறூஸா.
ஆஸாத் தற்கொலைத் தாக்குதலில் பலியான பின்னர், அவரின் மனைவி, சஹ்ரான் குழுவினரோடு இணைந்து சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் ஒளிந்திருந்தார். அதன்போது, அவர்கள் பாதுகாப்பு தரப்பினரால் சுற்றி வளைக்கப்பட்டனர். அதனால் அவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்து இறந்து போயினர்.