சஜீத் ஆதரவு அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: ஐ.தே.கட்சி தீர்மானம்

🕔 August 27, 2019

க்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் அஜித் பி பெரோ மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகியோருக்கு எதிராக, அந்தக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய மேற்படி கட்சியின் ஒழுக்கத்தை மீறியமை மற்றும் தலைமைத்துவத்தை விமர்சித்தமை தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக எழுத்துமூலம் விளக்கமளிக்குமாறு மேற்படி இருவருக்கும், கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக இவ்விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்காக இன்றைய தினம் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவுக்கு வருகை தருமாறு மேற்படி இருவக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததது.

எனினும் குறித்த இரண்டு பேரும் வருகை தராததை அடுத்து, கட்சியின் ஒழுக்காற்று குழுவினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் கட்சியின் தலைமைத்துவம், மத்திய செயற்குழு, கட்சியின் வேலைத்திட்டம் மற்றும் செயற்பாடுகளை பல்வேறுப்பட்ட வகையில் மேற்படி இருவரும் விமர்சித்ததாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவை களமிறக்க வேண்டுமென, மேற்படி இருவரும் கோரிக்கை விடுத்து வருவதோடு, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து, கூட்டங்களையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்