அக்கரைப்பற்றிலிருந்து கோடம்பாக்கம் வரை: ஆடுகளம், ஜாக்பொட் திரைப்படங்களில் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஹஸீன், ஜெய்னி

🕔 August 27, 2019

– மப்றூக் –

ந்திய தமிழ் சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் கடல் தாண்டியது. சினிமாக் கனவுகளோடு சென்னையை நோக்கி நாளாந்தம் வருகின்ற இந்திய இளைஞர்களின் தொகையும், கதையும் ஒருபுறமிருக்க, இலங்கையிலிருந்தும் கோடம்பாக்கம் நோக்கி அவ்வப்போது இளைஞர்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றனர். அவ்வாறானவர்களில் ஒருவர் ஜெய்னி. அண்மையில் வெளியான ‘ஜாக்பொட்’ திரைப்படத்தின் மூலம், உதவி இயக்குநராக அடையாளம் பெற்றுள்ள இவர், அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

இந்திய தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டுமென்று, 1997ஆம் ஆண்டு சென்னைக்கு காலடி எடுத்து வைத்த ஜெய்னியின் ஆசை, இப்போதுதான் முழுமயாக நிறைவேறியிருக்கிறது.

சினிமாக் கனவுகளுடன் சென்னைக்குச் சென்ற ஜெய்னி, அங்கு முதலில் இயக்குநர் வேலு பிரபாகரனை சந்தித்ததாகக் கூறுகிறார்.

ஜெய்னியின் பயணம்

“அப்போது ‘புரட்சிக்காரன்’ திரைப்படத்தை வேலு பிரபாகரன் இயக்கிக் கொண்டிருந்தார். உதவி இயக்குநராகப் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வத்தை அவரிடம் கூறினேன். இன்னொரு படத்தில் பணியாற்றலாம் என்று நம்பிக்கை தந்தார். அந்தச் சந்திப்பின் பிறகு இலங்கை வந்து விட்டேன்” என்று, தனது ஆரம்ப காலத்தை நினைவுகூர்ந்தார் ஜெய்னி.

அக்கரைப்பறில் ஜெய்னியை சந்தித்து, பேசியபோது, அவரின் சினிமா பயணத்தை விவரித்தார்.

கட்டுரையாளருடன் ஜெய்னி

”2000ஆம் ஆண்டு காலப் பகுதி என்று நினைக்கிறேன், மீண்டுமொரு தடவை சென்னை சென்றேன். அப்போது ‘காதல் கதை’ திரைப்படத்துக்கான வேலைகளில் இயக்குநர் வேலு பிரபாகரன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் எனது ஊரைச் சேர்ந்த நண்பர் ஹசீன், உதவி இயக்குநராக பணியாற்றினார். நானும் அவ்வப்போது அந்தப் படத்துக்காக வேலை செய்திருக்கிறேன். தொடர்ச்சியாகப் பணியாற்றக் கிடைக்கவில்லை. ஆனால், ‘காதல் கதை’ திரைப்படத்தில் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய ஹசீன் மற்றும் பத்மநாபா ஆகிய இருவரின் பெயர்களும் திரையில் காண்பிக்கப்படவில்லை”.

தடைகள்

“அந்தக் காலகட்டத்தில் என்னால், அங்கு நீண்ட காலம் தங்கியிருக்க முடியவில்லை. அதற்கு பண நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணங்களாக இருந்தன. மட்டுமன்றி நான் அப்போது திருமணம் முடித்திருந்தேன், குடும்பத்தையும் கவனிக்க வேண்டியிருந்தது. மேலும், சினிமாவுக்காக எல்லாப் பிரச்சினைகளையும் தாக்குப் பிடித்துக் கொண்டு பணியாற்றும் மனநிலையிலும் அப்போது நான் இல்லை”.

”ஆனாலும், இயக்குநர் வேலு பிரபாகரன் எனக்கு பல்வேறு வழிகளில் ஆதரவாக இருந்தார், பண உதவிகளும் செய்தார். அதனை நன்றியுடன் நான் பதிவு செய்ய விரும்புகிறேன்”

“ஒரு தடவை என்னிடம் இருந்த கதையொன்றை நடிகர் நாஸரைச் சந்தித்துக் கூறினேன். அந்தக் கதை அவருக்குப் பிடித்துப் போயிருந்தது. எனது கதை படமாக்கப்பட்டால், அதில் நான் உதவி இயக்குநராகவே பணியாற்றப் போவதாக நாஸரிடம் கூறினேன். இயக்குநர் வேலு பிரகாரனின் ‘காதல் கதை’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பத்மநாபா என்பவருடன் நட்பாக இருந்தேன். அவரை இயக்குநராக வைத்து எனது கதையை இயக்கலாம் என்று நாஸரிடம் கூறினேன். ‘காதல் கதை’க்குப் பிறகும் வேறு இயக்குநர்களின் ஐந்தாறு படங்களிலும் பத்மநாபா உதவி இயக்குநராகப் பணியாற்றியிருந்தார். இருந்தாலும் எனது கதையை திரைப்படமாக்கும் அந்த முயற்சி கைகூடாமல் போய்விட்டது” என்று, தனது கோம்பாக்க அனுபவங்களை ஜெய்னி பகிர்ந்து கொண்டார்.

‘ஜாக்பொட்’ அதிஷ்டம்

”சரி, ‘ஜாக்பொட்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது”?

”ஜாக்பொட் திரைப்பட இயக்குநர் கல்யாண் எனக்கு பழக்கமானவர். பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘குலேபகாவலி’ திரைப்படத்தையும் அவர்தான் இயக்கினார். அந்தப்படத்திலும் பணியாற்ற அவர் என்னை அழைத்திருந்தார். ஊரில் இருந்த சில பொறுப்புக்களை முடித்து விட்டு செல்வதற்கு இடையில் படப்பிடிப்பு முடிந்து விட்டது”. 

ஜாக்பொட் படப்பிடிப்பு தளம்

”இயக்குநர் கல்யாணுடன் பழக்கம் ஏற்பட்டதற்கும் ஒரு ‘கதை’ இருக்கிறது. இந்தியாவில் சிவா என்பவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் ‘காதல் கதை’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தான் திரைப்படம் ஒன்றை இயக்கப்போவதாகக் கூறி, அதில் உதவி இயக்குநராகப் பணியாற்றுவதற்காக, என்னை சென்னைக்கு சிவா அழைத்தார். நானும் சென்றேன்.

அந்தத் திரைப்பட நடவடிக்கைகளின் நிதித்தம் நாங்கள் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருந்தோம். அந்த அலுவலகத்துக்கு நண்பர்களுடன் கல்யாண் வருவார். அதன்போதுதான் அவருடன் எனக்குப் பழக்கமேற்பட்டது. ‘கதை சொல்லப் போறம்’ என்கிற சிறுவர் திரைப்படம் ஒன்றை இயக்கப் போவதாக அப்போது கல்யாண் கூறிக் கொண்டிருந்தார். அதற்கான கதை பற்றி அவர் என்னிடம் பேசுவார். அந்தத் திரைப்படம் வெளியாகியது. பிறகு ‘காத்தாடி’ எனும் படத்தையும் கல்யாண் இயக்கினார். ஆனால், அந்தப்படம் வெளியாகுவதற்கு முன்பாகவே ‘குலேபகாவலி’ வெளியாகி விட்டது. ‘கலைஞர்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நாளைய இயக்குநர்’ போட்டியில் கல்யாண் தேர்வு செய்யப்பட்டவர்”.

”குலேபகாவலி திரைப்படம் முடிந்த பிறகு, இயக்குநர் கல்யாணின் பல திரைக்கதை விவாதங்களில் நானும் பங்கு பற்றியிருந்தேன்”.

“இந்த நிலையில்தான் கடந்த டிசம்பர் மாதம் இயக்குநர் கல்யாண் என்னை சென்னைக்கு அழைத்தார், சென்றேன். 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.  முதன்முதலாக, திரையில் உதவி இயக்குநர் என, என் பெயர் வந்துள்ளது” என்கிறார் ஜெய்னி.

இந்திய தமிழ் சினிமாவுக்குள் உதவி இயக்குநராக பணியாற்றும் கனவுகளுடன் இருந்த காலப்பகுதியில், இலங்கையில் வைத்து இரண்டு குறும்படங்களை ஜெய்னி இயக்கியிருக்கிறார். ஆனால், சில காரணங்களால் அவை முழுமையடையவில்லை.

இப்போது ஜெய்னி கையில் சில திரைக்கதைகள் உள்ளன. படம் இயக்கும் ஆசை அவரிடம் அதிகமாகவே இருக்கிறது. அந்த வாய்ப்பு அவருக்குக் கிடைக்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தோம்.

ஹசீன்  

ஜெய்னி தன்னுடைய பேச்சினிடையே – தனது ஊர்க்காரர் என்று கூறிய ஹஸீன்; ‘ஒன்பது ரூபா நோட்டு’ மற்றும் ‘ஆடு களம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். ஆனாலும், மேற்சொன்ன திரைப்படங்களில்தான் உதவி இயக்குநர் என்று அவரின் பெயர் காண்பிக்கப்பட்டது.

ஹஸீன்

கிட்டத்தட்ட ஜெய்னியுடன் சம காலத்தில் உதவி இயக்குநர் கனவுடன் சென்னை சென்றவர் ஹஸீன். அவரின் பொறுமை, தனது இலக்கை அடைய வேண்டும் என்கிற எண்ணத்தால், சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியிருந்து தமிழ் சினிமாவுக்குள் ஹஸீன் தொடர்ந்து இங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், சினிமாத்துறைக்குள் நுழைவதற்கு முன்பாகவே, ஒரு இலக்கியவாதியாக இலங்கையில் ஹஸீன் அறியப்பட்டவர். ‘சிறியதும் பெரியதுமாக எட்டுச் சிறுகதைகள்’ எனும் புத்தமொன்றினை ஹஸீன் வெளியிட்டிருந்தார். பின்னர், ‘பூனை அனைத்தும் உண்ணும்’ என்கிற சிறுகதை நூல் ஒன்றையும் வெளிக்கொண்டு வந்தார். தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக வாய்ப்புத் தேடிய போது, ஹஸீனின் சிறுகதை நூல்கள், அவருக்கான ‘அடையாள அட்டையாக’ப் பயன்பட்டது.

ஹனீனுடைய சினிமா அனுபவங்களை தெரிந்து கொள்ளும் பொருட்டு, அக்கரைப்பற்றிலுள்ள அவரின் வீட்டில் சந்தித்துப் பேசினோம்.

உதவி இயக்குநராக வேண்டும் என்கிற பேரவாவுடன் இந்தியாவுக்கு காலடி எடுத்து வைத்தபோது ஹஸீன் 19 வயதேயான ஓர் இளைஞர்.

தங்கர்பச்சான் சந்திப்பு

”முதலாவதாக இந்தியா சென்று – நான் சந்தித்தவர் தங்கர்பச்சான். அப்போது அவர் இயக்குநராகவில்லை. ஆனால், நான் உதவி இயக்குநராக வேண்டும் என்பதற்காகவே அவரைத் தேடிச் சென்றேன். அப்போது; ‘இயக்குநராக வேண்டும் என்கிற ஆசை உள்ள நீ, ஏன் ஒளிப்பதிவாளர் என்னிடம் வந்திருக்கிறாய்’ என்று தங்கர்பச்சான் கேட்டார்”.

”தங்கர்பச்சானின் ஒன்பது ரூபா நோட்டு நாவலை நான் படித்திருந்தேன். அது பற்றி அவரிடம் சொன்னேன். நீங்கள் நிச்சயம் திரைப்படம் இயக்குவீர்கள். அப்போது என்னை உதவி இயக்குநராகச் சேர்ந்துக் கொள்ளுங்கள் என்று, அவரிடம் கூறினேன்”. 

இயக்குநர் செவ்வா இயக்கிய ‘ஜேம்ஸ் பாண்ட்’ திரைப்படத்துக்கு அந்த நேரத்தில் ஒளிப்பதிவாளராக தங்கர்பச்சான் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே, அந்தப் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை கேட்டுப் பார்க்கலாம் என்று கூறி, ஹோட்டல் ஆதித்யாவுக்கு என்னை தங்கர்பச்சான் அழைத்துச் சென்றார்”.

”அங்கு இயக்குநர் செல்வாவை சந்தித்து தங்கர்பச்சான் எனக்காக பேசினார். பதில் சொல்வதற்கு 15 நாட்கள் அவகாசம் தருமாறு இயக்குநர் செல்வா கேட்டார். அதற்கிடையில் துரதிஷ்டவசமாக எனக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டது. உடனடியாக நாடு திரும்பி விட்டேன்”

ஹஸீனுடைய முதலாவது பயணம், இப்படி குறுகிய காலத்துக்குள் முடிந்து விட்டது.

”2002ஆம் ஆண்டுக்கு பின்னர் திரும்பவும் இந்தியா பயணமானேன். வீட்டில் சொல்லாமல்தான் கிளம்பினேன். கொழும்பு வந்த போது, ஜெய்னியை சந்தித்தேன். அவர் இயக்குநர் வேலு பிரபாகரனைச் சந்திக்குமாறு கூறினார். ஜெய்னிக்கு வேலு பிரபாகரனுடன் ஏற்கனவே பழக்கம் இருந்தது. இந்தியா சென்றதும் வேலு பிரபாகரனை சந்தித்தேன். சென்னை – போரூரில் உள்ள தனது வீட்டில் அவர் என்னை தங்க வைத்தார்”.

முதன் முலாக வேலு பிரபாகரன் இயக்கிய ‘காதல் கதை’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதாக ஹஸீன் கூறினார்.

”வேலு பிரபாகரனிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போதே, தங்கர்பச்சானையும் சந்தித்து வந்தேன். அப்போது ‘அழகி’ மற்றும் ‘சொல்ல மறந்த கதை’ ஆகிய படங்களை தங்கர்பச்சான் இயக்கி முடித்துவிட்டார். ‘தென்றல்’ படத்துக்கான கதை விவாதம் நடந்து கொண்டிருந்தது. தங்கர்பச்சானை சந்தித்து வாய்ப்புப் பெற்றுக் கொள்ளுமாறு, இயக்குநர் வேலுபிரபாகரனும் என்னை உற்சாகப்படுத்தினார்.

இந்த நிலையில், தங்கர்பச்சானின் ‘தென்றல்’ படத்தில் பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. அதே காலகட்டத்தில் வேலு பிரபாகரனின் ‘காதல் கதை’யிலும் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

‘தென்றல்’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ‘ஒன்பது ரூபா நோட்டு’ நாவலை திரைக்கதையாக்கும் முயற்சியில் தங்கர்பச்சான் இறங்கினார். அதற்கான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் நானும் பங்குபற்றினேன். ஆனாலும், அதை படமாக்குவதில் தங்கர்பச்சானுக்கு தயக்கம் ஏற்பட்டது. ‘தென்றல்’ படம் எதிர்பார்த்தவாறு ஓடவில்ல என்பது அந்த தயக்கத்துக்குக் காரணமாக இருந்தது. எனவே ‘ஒன்பது ரூபா நோட்டு’ கதையை அப்படியே வைத்து விட்டு, ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’, ‘பள்ளிக்கூடம்’ ஆகிய படங்களை இயக்கினார். அந்த வகையில், திரைக்கதை வேலைகள் நடந்து, 02 வருடங்களுக்குப் பிறகுதான் ‘ஒன்பது ரூபா நோட்டு’ இயக்கப்பட்டது.

வெற்றிமாறனின் நட்பு

”தங்கர்பச்சானிடம் இயக்குநர் ராம் – அப்போது உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அவருடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இயக்குநர் பாலுமகேந்திராவிடம் என்னை அழைத்துச் சென்று ராம் அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் காலகட்டத்தில்தான் உதவி இயக்குநராக இருந்த  வெற்றிமாறனுடன் பழக்கம் ஏற்பட்டது. 

இயக்குநர் வெற்றி மாறனுடன் ஹஸீன்

”தங்கர்பச்சானின் ‘ஒன்பது ரூபா நோட்டு’ படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அந்தப் படம் வெளியாகிய காலப்பகுதியில்தான், வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’ திரைப்படமும் வெளியானது. ‘பொல்லாதவன்’ திரைப்படத்தின் திரைக்கதை விவாதத்தில் நானும் பங்குபற்றியிருந்தேன். படப்பிடிப்பிலும் பணியாற்றினேன்”.

அதன் பிறகுதான் ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அந்தத் திரைப்படத்துக்காக வேலை செய்தோம். 110 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. அந்த நேரத்தில் உதவி இயக்குநராக இருந்தவர்களில் இருவர் வேலைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அதிக பொறுப்புகளை நான் ஏற்க வேண்டியேற்பட்டது. அது எனக்கு மிகப்பெரும் அனுபவமாகும்”.

ஆடுகளம் படப்பிடிப்பு தளம் – நடிகர் தனுஷ் மற்றும் ஹஸீன்

“ஆடுகளத்தின் திரைக்கதை – புத்தமாக வந்துள்ளது. வெற்றிமாறனும் நானும் இணைந்துதான் அந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ளோம்”.

”ஆடுகளத்துக்குப் பிறகு, வெற்றி மாறனின் ‘வடசென்னை’ மற்றும் ‘விசாரணை’ ஆகிய திரைப்படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால், திரையில் எனது பெயர் வரவில்லை”.

இதன்பிறகு தன்னிடமுள்ள கதைகளை திரைப்படங்களாக இயக்குவதற்கான வாய்ப்புகளைத் தேடி ஹஸீன் முயற்சி செய்தார். ஆனாலும், அது இன்னும் சாத்தியமாகவில்லை.

காத்திருப்பு

தற்போது ஹஸீனுடைய கைகளில் 04 திரைக்கதைகள் உள்ளன.

“தங்கர்பச்சான் அவரின் மகனை வைத்து ஒரு திரைப்படம் பண்ண வேண்டுமென்று என்னிடம் ஒரு தடவை கதை கேட்டார்; சொன்னேன். கதை அவருக்குப் பிடித்துப் போனது. ஆனால், படம் எடுக்கவில்லை. வெற்றிமாறனும் அவரின் தயாரிப்பில் திரைப்படமொன்றை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு வழங்குவதாக கூறியிருக்கிறார்” என்கிறார் ஹஸீன்.

இப்போது தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ள ஹஸீன், குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்குவதில் தீவிரமாக உள்ளார். ‘தரப்பால் கொட்டில்கள்’, ‘ அடைக்கலம் தந்த வீடுகள்’, ‘ பம்பய்மடு’, ‘ மலரும் நினைவுகள்’ ஆகிய பெயர்களில் 04 குறும்படங்களையும், 11 ஆவணப்படங்களையும் ஹஸீன் இயக்கியுள்ளார். அவற்றில் ‘அம்பாரை மாவட்ட காணிப்பிரச்சினை’, ‘கண்டி முஸ்லிம்கள் மீதான சமூக வன்முறை’  மற்றும் ‘முன்னை நாள் பெண் போராளிகளின் இன்றைய வாழ்வாதார பிரச்சினை’களை வெளிக்கொண்டு வரும் ஆவணப்படங்கள் முக்கியமானவை.   

இந்திய தமிழ் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கிற கனவுகளுடன் இலங்கையிலிருந்து சென்ற ஏராளமானோரில், ஒரு சிலரின் கனவுளே பலித்திருக்கின்றன. உதவி இயக்குநராக பணியாற்றும் வாய்ப்பும் சிலருக்கே கிடைத்திருக்கின்றன.

முத்துராமன், சிவகுமார், ரஜினிகாந்த், அஜித்குமார் உள்ளிட்ட பலரை வைத்து படங்களை இயக்கிய புங்குடுதீவைச் சேர்ந்த வி.சி. குகநாதன், மட்டக்களப்பை சேர்ந்த பாலுமகேந்தரா ஆகியோர் இந்திய தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக வெற்றிக்கொடி கட்டிப் பறந்த இலங்கையர்களாவர்.

பின்னாட்களில் சங்கரின் 2.0 திரைப்படத்தின் மூலம் மட்டக்களப்பைச் சேர்ந்த கோவர்த்தன் உதவி இயக்குநராகக் களம் கண்டார். இவ்வாறு இன்னும் சிலரின் பெயர்களும் உள்ளன.    

சோதனை மிகுந்த சினிமாக் களம் நோக்கி, தமது கனவுகளைச் சுமந்து கொண்டு, இலங்கையிலிருந்து செல்லும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைய வேண்டும்.

ஹஸீன் – ‘தரப்பால் கொட்டில்கள்’ குறும்படப்பிடிப்பின் போது…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்