2290 கோடி ரூபாவில் உருவாக்கப்பட்ட மல்வத்து ஓயா திட்டம்; பிரதமரின் உதவி குறித்து அமைச்சர் றிஷாட் மகிழ்ச்சி தெரிவிப்பு
அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
மல்வத்துஓயா தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தல் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை விவசாய , மீன்பிடி, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தலைமையில் இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்புடன் மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, வட மத்திய ஆளுநர் சரத் எக்கநாயக்க, அமைச்சர் சந்திராணி பண்டாரநாயக்க, ரங்க பண்டார, ராஜாங்க அமைச்சர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, வசந்த அலுவிஹார , அநுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
அமைச்சர் றிஷாத் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
“காலா காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த இந்த கடினமான முயற்சி இன்று கைகூடி உள்ளது. இந்த திட்டத்தை உருவாக்க உழைத்தவர்களில் விஜித முனி சொய்சா, துமிந்த திசாநாயக்க மற்றும் ரங்கே பண்டாரே ஆகியோரை மறந்துவிடலாகாது . அதன் பின் அமைச்சர் ஹரிசனின் அயராத முயச்சியினால் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஒத்துழைப்பு, அங்கீகாரத்துடன் இந்த பிரமாண்டமான திட்டம் உருவாக்கப்பட்டது
நல்லாட்சி அரசின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்ட இந்த திட்டம் செயலுருப்படுத்தப்பட வெளிநாட்டு உதவிகள் தாமதமாகியதால் அரச நிதியை இதற்கு பிரதமர் பெற்றுத் தந்துள்ளார்
பல்லாயிர கணக்காண விவசாயிகளின் வாழ்விலே வசந்தத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் மக்களின் ஜீவனோபாயத்திலும் உயர்வை தரும்.
மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை, வியாயடி, அகத்தி முறிப்பு குளங்கள் உட்பட இன்னும் பல குளங்களுடன் வவுனியா, அனுராதபுரம் ஆகியவற்றில் உள்ள நீர் பாசனக் குளங்களும் இதன் மூலம் நன்மை பெறும். 2290 கோடியில் உருவாக்கப்பட்ட இந்த நீர்ப்பாசனத் திட்டத்தினால் ஒரு போகம் கூட விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருந்த விவசாயிகள் இரு போகங்களும் தராளமாக செய்கை பண்ணுவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.
ஓர் இனத்தின் அழிவில் மற்றைய இனம் மகிழ்ச்சி அடைந்த சூழலே இந்த நாட்டை குட்டி சுவராக்கியது என்ற உண்மையை நாம் இனியாவது உணர்வோமானால் இந்த நாடு விரைவில் சுபீட்சம் காணும்”என்றார்.
(அமைச்சரின் ஊடகப் பிரிவு)