கடைகளுக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த சிலின்டர்களை திருடி வந்தோர் சம்மாந்துறை பொலிஸாரிடம் சிக்கினர்
– பாறுக் ஷிஹான் –
கடைகளின் வெளிப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த எரிவாயு சிலின்டர்களை திருடி வந்த மூவரை கல்முனை பொலிஸார் வியாழக்கிழமை மாலை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கல்முனை சாய்ந்தமருது பகுதியியிலுள் கடைகளுக்கு வெளியில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சமையலுக்கு பயன்படுத்தப்படும் வாயு சிலின்டர்கள் திருடப்பட்டிருப்பதாக உரிமையாளர்களால் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட கடைகளின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா காட்சி மற்றும் புலனாய்வு அடிப்படையில் வாயு சிலின்டர்களை களவாடி எடுத்து சென்ற முச்சக்கர வண்டியின் புகைப்படம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றன.
குறித்த முச்சக்கர வண்டி சம்மாந்துறை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்பதை அறிந்த பொலிஸார், அதில் பயணம் செய்தவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு தற்போது கைது செய்துள்ளனர்.
இதில் கைதானவர்கள் தனது தந்தைக்கு தெரியாமல் முச்சக்கரவண்டியை எடுத்து சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வந்தள்ளது.
இவ்வாறு கைதானவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த அபு முகம்மட் சாதிக்(வயது – 17) லாபீர் முகமட் பயாஸ் (வயது – 19 ) அப்துல் கரீம் முகமட் அகீம்(வயது – 15) ஆகியோராவர்.
அண்மையில் அக்கரைப்பற்று, சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற சில திருட்டுச்சம்பவங்களுடன் கைதான நபர்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் என்றும், இந்தக் குழுவில் போதைப்பொருளுக்கு அடிமையானவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.