சூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்
சூரிய குடும்பத்துக்கு வெளியில், இரண்டு கோள்களுடனான ஒரு புதிய கோள் மண்டலத்தை இலங்கை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மஹேஷ் ஹேரத் மற்றும் சராஜ் குணசேகர ஆகியோரே இந்த புதிய கோள் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
மொறட்டுவையில் அமைந்துள்ள ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, இந்த விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சூரியனை விடவும் குறைவான பிரகாசத்தை கொண்ட நட்சத்திரமொன்றும், அதனை சூழ இரண்டு கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.
நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளானது, குறித்த நட்சத்திரத்தை 13 நாட்களில் சுற்றி வருவதாகவும், மற்றைய கோளானது நட்சத்திரத்தை 65 நாட்களில் சுற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
50 நாட்களுக்கு மேல் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் கோளொன்றை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விடயம் என சுட்டிக்காட்டிய அவர், அவ்வாறான கோளொன்றை இலங்கை கண்டுபிடித்துள்ளமை பாரிய சவாலான விடயம் எனவும் கூறியிருந்தார்.
கோளொன்றை கண்டுபிடிக்கும் தொலைநோக்கியின் பெயரையே தாம் இந்த கோள்களுக்கு வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளுக்கு K2-310B எனவும், நட்சத்திரத்திற்கு சற்று தொலைவிலுள்ள கோளுக்கு K2-310C எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.
K2-310B கோளானது பூமியை விடவும் 2.7 மடங்கு (33165 KM) பெரியது என்பதுடன், அதன் வெப்பநிலை 263 பாகை செல்சியஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கோளுக்கும், குறித்த நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரமானது, சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பத்தில் ஒன்று என சுட்டிக்காட்டப்படுகின்றது.
அதேபோன்று, K2-310C கோளானது பூமியை விடவும் 2.7 மடங்கு (34,441 KM) பெரியது என்பதுடன், அதன் வெப்பநிலை 43 பாகை செல்சியஸ் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோளுக்கும், குறித்த நட்சத்திரத்திற்கும் இடைப்பட்ட தூரமானது, சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரத்தில் மூன்றில் ஒன்று என சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கை விண்வெளி ஆய்வு நிறுவனமான ஆத்தர் சீ கிளார்க் நிறுவனம், இந்த ஆய்வினை 2017ஆம் ஆண்டு ஆரம்பித்திருந்தது. ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் பிரதான ஆய்வு விஞ்ஞானியான சராஜ் குணசேகர இந்த ஆய்வினை முதலில் ஆரம்பித்திருந்தார்.
சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள கோள் மண்டலங்களை கண்டறியும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் கேப்லர் செயற்பாட்டு தரவுகளை பயன்படுத்தி இந்த ஆய்வு முதலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகளை தொடரும் நோக்குடன் புதிய விண்வெளி விஞ்ஞானியான மஹேஷ் ஹேரத் 2018ஆம் ஆண்டு, பிரதான ஆய்வு விஞ்ஞானியான சராஜ் குணசேகரவுடன் கைக்கோர்த்துள்ளார்.
இதன்படி, நாசா நிறுவனத்தின் கேப்லர்-2 செயற்பாடுகளின் ஊடாக 5,88,991 நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டு, அவை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளின் ஊடாக 2018ஆம் EPIC 212737443 என்ற நட்சத்திரம் கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த நட்சத்திரத்தை சூழ இரண்டு கோள்கள் சுழன்று வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக ஆத்தர் சீ கிளார்க் நிறுவனம் குறிப்பிடுகின்றது.
இந்த கோள் மண்டலம் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து மேலதிக விடயங்களை கண்டறிந்து கொள்வதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்த 11 விண்வெளி விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு ஆய்வு கண்காணிப்பாளராக கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனங்களினால் தமது கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார். அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததும், சர்வதேச நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான ரோயல் விண்வெளி ஆய்வு சங்கத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்பின்னர் பல்வேறு விண்வெளி ஆய்வுகள் தொடர்பான நிறுவனங்களின் இணையத்தளங்களும் இந்த கண்டுபிடிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தியதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் குறிப்பிடுகின்றார்.
இந்த இரண்டு கோள்களிலும் வாயு மண்டலம் மற்றும் நீர் காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் தெரிவிக்கின்றார்.
அத்துடன், நட்சத்திரத்தை அண்மித்துள்ள கோளின் வெப்பநிலை 263 பாகை செல்சியஸ் என்பதனால், அந்த கோளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் குறைவாகவே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எனினும், குறித்த நட்சத்திரத்திற்கு சற்று தொலைவிலுள்ள கோளின் வெப்பநிலையானது, 43 பாகை செல்சியஸ் என்பதனால், உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி, மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் அந்த கோள்களில் உள்ளனவா என்பதை கண்டறிய உள்ளதாக விஞ்ஞானி மஹேஷ் ஹேரத் உறுதியளித்தார்.
விண்வெளி ஆய்வுகளில் மிகவும் முன்னிலையில் திகழ்கின்ற அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் பட்டியலில் ஆசிய நாடான இலங்கையும் இணைந்துக்கொண்டுள்ளமை பெருமை அளிப்பதாக விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவிக்கின்றார்.
இந்த திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் தமது திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்தும் அவர் இதன்போது தெளிவூட்டினார்.
”இலங்கையில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமொன்றை தொடங்குவது தொடர்பாக 2015ஆம் ஆண்டு நாங்கள் திட்டமொன்றை தயாரித்திருந்தோம். இந்த திட்டத்தை நாங்கள் அரசாங்கத்திடம் கையளித்துள்ளோம். இந்த திட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவு வழங்கும் என நான் நினைக்கின்றேன். சர்வதேச அளவிலான ஆய்வுகளை நடத்தும் அளவிற்கு நாம் வந்துள்ளோம்.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படும் பட்சத்தில், பாடசாலை மாணவர்கள் முதல் இதனுடன் ஆர்வமுள்ள அனைவரையும் விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுத்த முடியும். அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பாரிய ஒத்துழைப்பாக அமையும். பலர் விண்வெளி தொடர்பான ஆர்வத்திலிருந்து தற்போது விலகிச் செல்கின்றனர். அதனால் இது இந்த காலத்திற்கான தேவையாகவே காணப்படுகிறது” என விஞ்ஞானி சராஜ் குணசேகர கூறுகிறார்.
சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இலங்கையில் தொடங்குவதற்கு 750 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக ஆத்தர் சீ கிளார்க் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் சனத் பனாவின்னகே தெரிவிக்கின்றார்.
”சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையமொன்றை தொடங்குவதற்கான ஆய்வு அறிக்கையை 2016ஆம் ஆண்டு திறைசேரியிடம் ஒப்படைத்துள்ளோம். இதற்கு தேசிய திட்டம் தொடர்பான திணைக்கத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. தேசிய திட்டம் தொடர்பான திணைக்கத்தின் அனுமதியை பெற்ற பல திட்டடங்கள் காணப்படுகின்றன.
எமது திட்டத்தின் முதலீட்டு தொகையானது மிகவும் பெரியளவில் காணப்படுகின்றது. 750 மில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது. தற்போதைய காலத்தில் அந்த தொகை மேலும் அதிகரித்திருக்கக்கூடும். சர்வதேச திட்டங்களை எமக்கு பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே நாம் ராவணா செய்மதியையும் தயாரித்திருந்தோம்.
விண்வெளியிலுள்ள செய்மதிகளின் தரவுகளை தரவிறக்கம் செய்தல் மற்றும் பகிர்ந்தளிக்கும் நிலையமொன்றை தொடங்கும் திட்டமொன்றும் எம்வசம் காணப்படுகின்றது. அதற்கான காணியை அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ளது” என பொறியியலாளர் சனத் பனாவின்னகே குறிப்பிடுகின்றார்.