கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு, சொந்த மாவட்டத்தில் நியமனம்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூபிடம் உறுதி
– ஹஸ்பர் ஏ ஹலீம் –
கல்வியல் கல்லூரிகளில் இருந்து புதிதாக ஆசிரியர் நியமனங்களைப் பெற்று வெளியேறும் ஆசிரியர்களுக்கு, தங்களது சொந்த மாவட்டத்தில் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற சந்திப்பின் போதே, இக்கோரிக்கையை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ. முதுபண்டாவிடம் பிரதியமைச்சர் முன்வைத்துள்ளார்.
இப் பிரச்சினைக்கான தீர்வாக உடன் அமுலுக்கு வரும் வகையில் ஆசிரியர் பற்றாக்குறையினை கருத்திற் கொண்டு, திருகோணமலை மாவட்ட கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தில் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதியமைச்சரிடம் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதியமைச்சர் மேலும் அங்கு கூறுகையில்;
“திருகோணமலை, கிண்ணியா வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனை உடனடியாக தீர்த்து சிறந்த கல்விச் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். பாடசாலையில் ஆளணிப் பற்றாக்குறைக்கான தீர்வுகளை பெறவேண்டியுள்ளது.
எனவே ஆசிரியர்களை தங்களது சொந்த மாவட்டத்தில் நியமனம் செய்வதால், பற்றாக்குறைக்கு முடிவு பெறலாம்” என்றார்.
இச் சந்திப்பின் போது மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே. மன்சூர், கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம் உட்பட கல்வி உயரதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் உடனிருந்தார்கள்.