அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்
அம்பாறையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் சொத்துளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா திறைசேரி மூலம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார்.
இந்த நஷ்டஈடு முதற் கட்டமாக விரைவில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, நீண்டகாலம் இடம்பெயர்ந்தோருக்கான மீள்குடியேற்ற
செயலணியின் நிதியிலிருந்தும் 06 மில்லியன் ரூபாவை அமைச்சர் றிஷாத் பதியூதீன் நஷ்ட ஈடுகள் வழங்குவதற்கு
ஒதுக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்செயல்களினால் சேதமாக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ
பள்ளிவாசலுக்கு 26 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட ஏனைய 13 சொத்துகளுக்கு 3.6 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்ட ஏனைய 13 சொத்துக்களுக்கு தற்போது
திறைசேரியினால் வழங்கப்பட்டுள்ள 10 மில்லியன் ரூபாவிலிருந்து முதற்கட்டமாக தலா ஒரு லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது.
கண்டி – திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட
சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது போன்று, அம்பாறை வன்செயல்களினால் பாதிக்கப்பட்டுள்ள சொத்துகளுக்கும் கட்டம் கட்டமாகவே நஷ்டஈடுகள் வழங்கப்படவுள்ளன.
அம்பாறை நஷ்டஈடுகளை துரிதப்படுத்தும்படி புனர்வாழ்வு அமைச்சுக்குப் பொறுப்பாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
உத்தரவினை பிறப்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.