மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்
மஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு ரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
பதவி ரத்துச் செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியலை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தயாரித்துள்ளதாகவும், அந்தப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விரைவில் கையளிக்கப்படும் எனவும், ஜனாதிபதி செயலகத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 95 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 பேர் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளனர்.
கட்சியொன்றின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வார்களாயின், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு, அவர் தெரிவான கட்சிக்கு உரிமை உள்ளதாகவும், மேற்படி ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.