முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்கள்: பெண்ணுரிமை குறித்து வலுப்பெறும் விவாதம்

🕔 August 9, 2019

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக)

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் வயதை 18 ஆக மாற்றுதல், திருமண பதிவுப் பத்திரத்தில் மணப் பெண்ணின் கையெழுத்தை அவசியமாக்குதல், மணப் பெண்ணின் விருப்பத்தை கோருதல், பெண் காழி நீதிவான்களை நியமித்தல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் உரத்து எழுந்து வரும் நிலையில், அதற்கு தடையாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும், முஸ்லிம் சமூகத்திலுள்ள சில பழமைவாத இயக்கங்களும் செயற்பட்டு வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

‘இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தத்தை ஆதரித்தல்’ எனும் தலைப்பில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘கண்டி ஃபோரம்’ எனும் அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பாலின சமத்துவம், சமூக நீதிக்கான முயற்சி

குர்ஆனின் குறிக்கோளான பாலின சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றை அடைவதற்குரிய சாதகமான முற்போக்கான நடவடிக்கையாகவே, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நடவடிக்கையினை தாங்கள் கருதுவதாகவும், இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டு 1970, 1984, 1990, 2005, 2009 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அரசாங்கத்தாலும் முஸ்லிம் அமைப்புகளாலும் இதைப்பற்றி ஆராய்வதற்குப் பல குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் அவசரமான தேவை நிர்வாகச் சீர்திருத்தமே தவிர, சட்டத்தைத் திருத்துவதல்ல” என்பதே ஜம்மிய்யதுல் உலமாவின் கருத்தாகும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் எவ்வகையான திருத்தங்களுக்கும் ஜம்மிய்யதுல் உலமா எதிராக இருக்கின்றனர். இச்சட்டம் ஷரியாவின் அடிப்படையிலானது என்றும், ஆகையால் அது மாற்ற முடியாதது என்றும் அவர்கள் நம்புகின்றனர் எனவும் ‘கண்டி ஃபோரம்’ எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் சமூக மாற்றங்கள்

கடந்த நூறு ஆண்டுகளில் ஏனைய முஸ்லிம் நாடுகளைப் போலவே இலங்கை முஸ்லிம் சமூகமும் பாரிய சமூக மாற்றங்களுக்கு ஆளாகி இருப்பதையும் கவனத்தில் கொண்டு, பாலின சமத்துவம் பற்றிய குர்ஆனிய குறிக்கோளுக்கு இணக்கமான வகையில் இச்சட்டத்தின் சிலபகுதிகள் திருத்தப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்ற முடிவுக்கு தாங்கள் வந்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டுமென தற்போது முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்கள் மலேசியா, இந்தோனீசியா, எகிப்து, மொரோக்கோ மற்றும் துனீசியா போன்ற பல இஸ்லாமிய நாடுகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை என்பதையும் நாம் அழுத்திக் கூற விரும்புகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜம்மிய்யதுல் உலமா சீர்குலைக்கிறது’

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்த முயற்சிகளைச் சீர்குலைக்க அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா விடாப்பிடியாக முயற்சிக்கின்றது. ஷரியா பற்றிய தங்களது மிகப் பழமைவாத, ஏற்றுக்கொள்ளமுடியாத விளக்கங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வரை, ஜம்மியத்துல் உலமா திருப்தி அடையாது என்பதையே இது காட்டுகின்றது’ எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமய விவகாரங்களில் தங்களுக்கே ஏகபோக அதிகாரம் உண்டு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஷரியா பற்றிய தங்கள் வரையறைக்குட்பட்ட, பழமைவாத புரிதல் காரணமாக முஸ்லிம் உலகின் முற்போக்கான செல்நெறிக்கு அவர்கள் எதிராக இருக்கிறார்கள்.

பெண்களின் குறைந்தபட்சத் திருமண வயதை அதிகரிப்பதும், பெண்களை காழிகளாகவும், விசேட காழிகளாகவும் விவாகப் பதிவாளர்களாகவும் நியமிப்பதும் ஷரியாவுக்கு விரோதமானது என அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். பல முஸ்லிம் நாடுகளில் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக உயர்த்தப்பட்டிருப்பதையும், பெண்கள் இப்பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருப்பதையும், உலகம் முழுவதிலும் உள்ள பல கற்றறிந்த உலமாக்கள் அவற்றுக்கு ஒப்புதல் அளித்திருப்பதையும் அவர்கள் கருத்தில் கொள்வதில்லை என்றும், கண்டி ஃபோரம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமரசம் வேண்டாம்

ஆகவே, முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எந்தவித சமரசங்களும் இன்றி, முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தைச் சமர்ப்பிக்கும் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்குமாறும், நாடாளுமன்றத்தில் அதைச் சட்டமாக இயற்றுவதற்கு வேண்டிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ள அந்த அமைப்பு, பொதுவாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின், குறிப்பாக முஸ்லிம் பெண்களினது முன்னேற்றத்தில் இது ஒரு வரலாற்று நிகழ்வாக அமையும் எனவும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பேராசிரியர் நுஃமான் பதில்

இது இவ்வாறிருக்க, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவும், அந்த நாடுகளின் ஜி.எஸ்.ரி. வரிச் சலுகையினைப் பெற்றுக் கொள்வதற்காகவுமே, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அதனை நிறைவேற்றுவதற்காகவே, சில முஸ்லிம் அமைப்புக்ககள் கோசமிடுவதாகவும் கூறப்படும் பொதுவான குற்றச்சாட்டு தொடர்பில், பேராசிரியர் எம்.ஏ. நுஃமானிடம் பிபிசி தமிழ் கேள்வியெழுப்பியது.

ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமான், பேராசிரியர் எம்.ஏ.எம். சித்தீக், பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ், பேராசிரியர் எம்.ஐ. மவ்ஜுத், கலாநிதி ஏ.எல்.எம். மஹ்றூப், கலாநிதி எம்.இசற்.எம். நஃபீல் மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நவ்பல் உள்ளிட்ட 10 பேர் ஒப்பமிட்டு மேற்படி கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், ”இது ஏற்றுக்கொள்ள முடியாத, போலியான குற்றச்சாட்டு என்று கூறியதோடு. “முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு, கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜி.எஸ்.ரி. வரிச் சலுகை புதிய விடயம்” எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி கடிதத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில், கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்காக அகில இலங்க ஜம்மிய்யத்துல் உலமாவின் செயலாளரை தொலைபேசி வழியாக பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோதும் அவரிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆயினும், தான் நோய்வாய்பட்டிருப்பதாகவும், தொலைபேசி அழைப்புக்கு தன்னால் பதிலளிக்க முடியாது என்றும் பின்னர், அவர் குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தார்.

மாற்றுக் கருத்தை முன்வைக்கும் மௌலவி முபாறக்

இந்த நிலையில், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் “தற்போதைய சட்டத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு சாரார் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை” என்று பிபிசி தமிழிடம் கூறினார்.

“முஸ்லிம் திருமண, விவாகரத்துச் சட்டம் என்பது பல காலமாக இந்த நாட்டில் உள்ளது. இறுதியாக 1951ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்தச் சட்டம், இன்று வரையில் நடைமுறையிலுள்ளது. இந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களுக்கு அவர்களின் மூதாதையர்கள் ஒரு தனியான சட்டத்தை பெற்றுத் தந்தமை பெரியதொரு விடயமாகும். இந்த நாட்டில் பல முஸ்லிம் அரசியல் கட்சிகள் இருந்தும், ஒர் உரிமையைக் கூட, முஸ்லிம்களுக்குப் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த நிலையில், முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் எனும் உரிமையை பாதுகாப்பதே எமக்குள்ள சவாலாகும். அதை விடுத்து, இருக்கின்ற சட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி அதனை இல்லாமலாக்க முயற்சிப்பது நல்ல செயலல்ல” என்று மௌலவி முபாறக் தெரிவித்தார்.

“இஸ்லாத்திலோ, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்திலோ எந்தவொரு இடத்திலும் பெண்கள் 12 வயதில் திருமணம் முடிக்க வேண்டும் என்று, எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால், முஸ்லிம் விவாக சட்டத்தில், ஒரு பெண்ணுக்குரிய ஆகக்குறைந்த திருமண வயது 12ஆக இருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் 12 வயதில் ஒரு பெண் திருமணம் முடிக்க வேண்டும் என்கிற கட்டளையாக அது கூறப்படவில்லை. இதை விளங்கிக் கொள்ள வேண்டும்”.

“இஸ்லாத்தில் திருமண வயது என்பது ஒரு பெண் பருவமடையும் வயதாகும். ஆனால், பருவமடைந்தவுடன் திருமணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல”.

“இதேவேளை, முஸ்லிம் திருமண சட்டத்தில் பெண்ணின் ஆகக்குறைந்த திருமண வயது 12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதற்காக, இப்போது யாரும் 12 வயதில் தமது பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதில்லை. முஸ்லிம் சமூகத்தில் இது தொடர்பில் ஓர் ஆய்வினை மேற்கொண்டால், 12 வயது போன்ற இள வயதுகளில் திருமணமான முஸ்லிம் பெண்கள் மிக அரிதாகவே இருப்பார்கள். 30 வயது தாண்டியும் திருமணம் ஆகாத முஸ்லிம் பெண்கள்தான் அதிகம் இருக்கின்றார்கள்.

அதேபோன்று பெண்களை காழி நீதவான்களாக நியமிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. முகம்மது நபியவர்களின் காலத்தில் மிகவும் புத்திசாலித்தனமான பல பெண்கள் இருந்த போதும், எந்தவொரு பெண்ணையும் நபியவர்கள் காழியாக நியமிக்கவில்லை.

ஒரு பெண்ணுக்கு ‘வொலி’ (பாதுகாவலர்) இல்லாத போது, காழியொருவர் ‘வொலி’யாக (பாதுகாவலராக) இருந்து, குறித்த பெண்ணின் திருமணத்தை நடத்தலாம் என்று இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை, ஒரு திருமணத்தில் ‘வொலி’யாக (பாதுகாவலராக) பெண் செயற்பட முடியாது என்றும் இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால், பெண்களை காழிகளாக நியமிக்க முடியாது. அவ்வாறு நியமித்தல் இஸ்லாத்துக்கு முரணாகும்.

ஆனாலும், ஆண் காழிகளின் ஆலோசகர்களாக அல்லது உதவியாளர்களாக பெண்களை நியமிக்க முடியும் அதில் நமக்கு ஆட்சேபனைகள் இல்லை” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, காழிகளாக நியமிக்கப்படுகின்றவர்கள் மௌலவிகளாகவும், அதேசமயம், அவர்கள் பட்டதாரிகளாகவும் இருக்க வேண்டும் என்று, தான் வலியுறுத்தி வருவதாகவும் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்