ஹக்கீம் கீழுள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபாய் மோசடி; அதன் தலைவர் அன்சாருக்கு எதிராக முறைப்பாடு

🕔 August 7, 2019

மைச்சர் ரஊப் ஹக்கீமின் கீழ் உள்ள நீர் வழங்கல் அதிகார சபையில் 40 கோடி ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, மொரட்டுவ நீதவான் நீதிமன்றத்தில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கொழும்பு – கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம்.எம். இம்தியாஸ் என்பவர், கடந்த ஜுலை மாதம் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், இந்த அறிக்கை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டள்ளது.

மேற்படி முறைப்பாட்டாளரான இம்தியாஸ் என்பவர், நீர் வழங்கல் அதிகார சபையின் முன்னாள் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர்வழங்கல் அதிகார சபையின் தலைவர் கே.ஏ. அன்சார் மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் எச்.ஏ. றசீட் ஆகியோர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

நீர் வழங்கல் அதிகார சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற கொழும்புக்கான விசேட செயற் திட்டத்தில், மேற்படி நிதி மோசடி இடம்பெற்றுள்ளது.

2013ஆம் ஆண்டு மேற்படி திட்டத்துக்காக பத்திரிகை மூலம் கேள்வி மனு கேரப்பட்டதாகவும், நல்லாட்சி அரசாங்கத்திலேயே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த திட்டத்திலேயே, நீர்வழங்கல் அதிகார சபையின் தலைவர் அன்சார் மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் றசீட் ஆகியோர், 40 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடி தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ள இம்தியாஸ் என்பவரை, ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு பேசியபோது; குறித்த முறைப்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வருமாறு, சிலர் தன்னுடன் பேசியதாகவும், ஆனால் இதிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் கூறினார்.

Comments