பள்ளிவாசலில் கைப்பற்றப்பட ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி: சேவையிலிருந்து இடைநிறுத்தம்
வெலம்பொட பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கத்திகள் மற்றும் கோடாரி ஆகியவற்றினை திருப்பிக் கொடுக்க முயற்சித்த, வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 28ஆம் திகதியன்று வெலம்பொட பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்ட 76 மன்னா கத்திகள், 13 கோடாரிகள் ஆகியவை, வெலம்பொட பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டன.
இந்த நிலையில், வெலம்பொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கண்டி பெரஹரவில் கடமை புரிந்து கொண்டிருந்த நிலையில், பதில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிவர், மேற்குறித்த ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க முயற்சித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, குறித்த பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரை, இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு, பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, வெலம்பொட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.