கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில், மூன்று தங்கப் பதக்கம் வென்ற றிஸ்வான்: பெருமை கொள்கிறது அட்டாளைச்சேனை
🕔 August 6, 2019
– மப்றூக் –
ஏழ்மையும், இல்லாமையும் இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தடைகள் அல்ல என்பதை, கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எம்.எம். றிஸ்வான் எனும் இளைஞர் நிரூபித்திருக்கின்றார்.
ஏழ்மைக்கு மத்தியிலும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்கிற கனவுகளுடன் இருக்கும் இளைஞர்களுக்கு நம்பிக்கையினையும், உற்சாகத்தையும் வழங்கும் பொருட்டும், றிஸ்வான் எனும் இளைஞனின் சாதனைகளைப் பாராட்டும் வகையிலும், அவர் பற்றிய தகவல் தொகுப்பொன்றினை வழங்குகிறோம்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய றிஸ்வான், கடந்த வாரம் கிழக்கு மாகாண விளையாட்டு அமைச்சு நடந்திய, மாகாண விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு 03 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
110 மீற்றர் தடை தாண்டல், 4 X 100 மற்றும் 4 X 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளில் இவர் இந்தப் பதக்கங்களை வென்றெடுத்துள்ளார். இவற்றில் 4 X 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இவரின் குழுவினர், கிழக்கு மாகாண மட்டத்தில் புதிய சாதனையொன்றினையும் நிலை நாட்டியுள்ளார்கள்.
கடந்த காலத்தில் 4X400 மீற்றர் அஞ்சலோட்டத்தை 03:31:01 நிமிடங்களில் ஓடிக் கடந்த சாதனையை, இம்முறை றிஸ்வான் குழுவினர் 03:30:00 நிமிடங்களில் ஓடிக் கடந்து புதிய சாதனையொன்றை நிலை நாட்டினர்.
கிழக்கு மாகாணத்தில் இந்த வெற்றிகளைப் பெற்றமையின் மூலம், இவர் 45ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தினையும் பெற்றுள்ளார்.
2016ஆம் ஆண்டு உயரம் பாய்தல் போட்டியில் பாடசாலை மட்டத்தில் கலந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமை மூலம், விளையாட்டுத்துறைக்குள் நுழைந்த இவர், அதே ஆண்டு, பாடசாலை மட்டத்தில் உயரம் பாய்தலில் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது இடத்தை வென்றார்.
விளையாட்டு வீரர்கள் அணியும் சப்பாத்து மற்றும் ஆடைகள் இல்லாமலேயே, அந்தப் போட்டியில் தான் கலந்து கொண்டதாக கூறும் றிஸ்வான், தனது இலக்கை அடைவதில் சோர்ந்து போகவில்லை.
இதனையடுத்து 2016ஆம் ஆண்டு உயரம் பாய்தல் போட்டியில் கழக மட்டத்தில் கலந்து கொண்ட றிஸ்வான், கிழக்கு மாகாணத்தில் 03ஆம் இடத்தை பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர், 2017ஆம் ஆண்டு உயரம் பாய்தல் போட்டியில் பாடசாலை மட்டத்தில் கலந்து கொண்டு, மாகாணத்தில் இவர் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவை மட்டுமன்றி கடந்த வருடம் நடைபெற்ற 30ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவிலும் இவர் 4 X 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கலந்து கொண்டு, வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
விளையாட்டுத் துறையில் றிஸ்வான் பெற்றுக் கொண்ட இந்த வெற்றிகளுக்காகவும், அவரின் திறமைகளுக்காகவும் கல்வியமைச்சினால் இவருக்கு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம் அண்மையில் வழங்கப்பட்டது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டு வருடங்களுக்கு முன்னர் றிஸ்வான் கல்வி கற்ற பாடசாலைக்கே, அவர் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.
ஏழ்மையும், இல்லாமையும் ஒருவரின் இலக்கினையும் இலட்சியத்தினையும் அடைவதற்குத் தடையில்லை என்பதற்கு, றிஸ்வான் பெற்றுக் கொண்ட வெற்றிகள் உதாரணங்களாக உள்ளன.
தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் றிஸ்வான் சாதனை படைக்க வேண்டுமென, நாமும் வாழ்த்துகிறோம்.