கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் ‘சொதப்பல்’கள்; வெற்றி பெற்றோருக்கு பதக்கங்களும் வழங்கப்படவில்லை: வீரர்கள் புகார்

🕔 August 6, 2019

– அஹமட் –

கிழக்கு மாகாண விளையாட்டு விழா கடந்த மாதம் 31 மற்றும் இம்மாதம் 01ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போதும், அதில் பல்வேறு குறைபாடுகளும் ஒழுங்கின்மைகளும் காணப்பட்டதாக, விளையாட்டு வீரர்களும் ஆர்வலர்களும் புகார் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சு நடத்திய இந்த விழாவின் ஆரம்ப மற்றும் இறுதி வைபவங்களில், பல்வேறு ‘சொதப்பல்கள்’ காணப்பட்டதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக விளையாட்டு விழா ஆரம்மானதும் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, நடுவர் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்தியப் பிரமாணம் இடம்பெறுதல் வேண்டும்.

ஆனால், விளையாட்டு விழாவுக்கு அதிதிகளாக வந்திருந்த அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட பின்னரே, மேற்படி நிகழ்வுகளை ஏற்பாட்டாளர்கள் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களில் அதிகமானோர் வெற்றி மேடைக்கு அழைக்கப்பட்டு பதக்கம் வழங்கப்பட்டு கௌவிக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.

பார்வையாளர்கள் மத்தியில் தாம் பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவதையே விளையாட்டு வீரர்கள் விரும்புகின்றனர். ஆனாலும், போட்டிகளில் வெற்றி பெற்றோரில் அதிகமானோருக்கு இறுதி நிகழ்வின் போது பதக்கங்கள் வழங்கப்படவில்லை என்றும், பின்னொரு நாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்குவதாக அதிகாரிகள் கூறிச் சென்றதாகவும் வெற்றி பெற்ற வீரர்கள் ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தனர்.

இவை மட்டுமன்றி, இந்த விளையாட்டு விழாவில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்ளுக்கும் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை.

மேலும், அட்டாளைச்சேனையில் இந்த விழா நடத்தப்பட்ட போதும், அங்குள்ள கழகங்களை விழா ஏற்பாட்டாளர்கள் தொடர்பு கொள்ளவில்லை என்றும், விளையாட்டில் சாதனை படைத்துள்ள இப் பிரதேசத்தின் சிரேஷ்ட வீரர்கள், இந்த விழாவுக்கு அதிதிகளாக அழைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளராக என்.எம். நௌபீஸ் தலைமையில் இந்த விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்