சிறு வயது பௌத்த பிக்குகள் 07 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று; சிகிச்சை பெறுவதாக, அமைச்சர் ரஞ்சன் தெரிவிப்பு

🕔 August 6, 2019

சிறு பராயமுடைய 07 பௌத்த பிக்குகள், எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவருவதாக, ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த பிக்குகள் சிலர், பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுவருவது தொடர்பான தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

பௌத்த பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகளும் தன்னிடம் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிடுகின்றார்.

தாம் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்களை இரண்டு சிறுபராய பௌத்த பிக்குகள் தன்னிடம் வழங்கியதாகவும், அது குறித்து தான் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பௌத்த பிக்குகள் மாத்திரமின்றி, வேறு சமயங்களை சேர்ந்த மதத் தலைவர்களும் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றமை தொடர்பான தகவல்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.

மதத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற ஆதாரங்கள் தனது கையடக்கத் தொலைபேசியில் உள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

வெளிப்படையாக காண்பிக்க முடியாத ஆதாரங்களே தன்வசம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தன்னிடம் இருக்கும் ஆதாரங்களின் ஊடாக, பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்ற பௌத்த பிக்குகளை அடையாளம் கண்டுகொள்வதற்கு முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பல்வேறு தரப்பிற்கு தெரிவித்திருந்த போதிலும், தமக்கான நியாயம் கிடைக்கவில்லை என சிறுவயது பௌத்த பிக்குகள் தன்னிடம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் குரல் எழுப்பினால், அரசியல்வாதிகளின் வாக்குவங்கி குறையும் சாத்தியம் இருப்பதால், எந்தவொரு அரசியல்வாதியும் இது குறித்து கருத்து வெளியிடமாட்டார்கள் எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவிக்கிறார்.

எனினும், தான் வாக்கு வங்கியை எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை என்று கூறிய அவர், அரசியலிலிருந்து வெளியேற்றினாலும் தான் நியாயம் கிடைக்கும் வரை போராடப் போவதாகவும் அவர் கூறினார்.

தானமாக வழங்கப்படும் உணவை உட்கொள்ளும் பிக்குகள், அந்த அன்னதானத்தை வழங்குவோரின் பிள்ளைகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக அவர் குறிப்பிடுகிறார்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு சமயத்தைச் சேர்ந்த சமயத் தலைவராக இருந்தாலும் பரவாயில்லை, தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

சமயத் தலைவர்கள் செய்த பாலியல் துஷ்பிரயோகங்கள், ஊழல்கள், மோசடிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும் ரஞ்ஜன் ராமநாயக்க கூறுகிறார்.

இதுவரை தான் அமைதியாக இருந்ததாகக் கூறிய ராமநாயக்க, இனியும் அமைதிகாக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்