றிசாட், ஹக்கீம் உட்பட நால்வர் அமைச்சுப் பதவியேற்பு; பைசல், ஹரீஸ், அலிசாஹிர் பொறுப்பேற்கவில்லை

🕔 July 29, 2019

– மப்றூக் –

கில இலங்கை மக்கள் காங்கிஸ் தலைவர் றிசாட் பதியுதீன், அதே கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ். அமீர் அலி, அப்துல்லா மஹ்றூப் மற்றும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் ஆகியோர் தாம் ராஜிநாமா செய்த அமைச்சுப் பதவிகளை சற்று முன்னர் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து, இவர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

றிசாட் பதியுதீன் மற்றும் ரஊப் ஹக்கீம் ஆகியோர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சுப் பதவிகளையும், அமீரலி ராஜாங்க அமைச்சர் பதவியினையும், அப்துல்லா மஹ்றூப் பிரதியமைச்சர் பதவியினையும் இதன்போது பெற்றுக் கொண்டனர்.

இதேளை, முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ராஜாங்க அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்த பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் இன்றைய தினம் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் உடன் பேசிய போது; கல்முனை பிரதேச செயலக விவகாரத்துக்கான தீர்வு கிட்டிய பின்னர், அடுத்து வரும் வாரத்தில் தமது பதவிகளை மீண்டும் பாரமேற்கவுள்ளதாக அவர் கூறினார்.

“கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் பேசி, அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே தலைவர் ஹக்கீம் அவரின் பதவியைப் பொறுப்பேற்றுள்ளார்.

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான வேலைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எப்படியோ ஒரு வாரத்தில் நாங்கள் மூவரும் எமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்போம்” என்றும் பைசல் காசிம் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்