வீதியோரத்தில் வீசப்படும் கோழிக் கடைக் கழிவுகள்; உரிய அதிகாரிகள் பாராமுகம்

🕔 October 14, 2015

Garbage issue  - 01
– எஸ். அஷ்ரப்கான் –

ருதமுனையை அண்மித்த துறைநீலாவணை கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் இரு மருங்கிலும் வீசப்படும் கோழிக் கழிவுகளால், இப் பகுதி மக்கள் பல்வேறு அசொகரியங்களை எதிர்கொள்வதாக புகார் தெரிவிக்கின்றனர்.

கோழி இறைச்சி விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள், தங்களின் கோழிக் கழிவுகளை இவ்வீதியில் உள்ள பற்றைக் காடுகளுக்குள்ளும், வீதியிலும் அதிகாலை வேளையில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், பிரதேசவாசிகள், பாதசாரிகள் மற்றும் மாணவர்கள் என, அனைத்துத் தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர் கொள்கின்றனர்.

இவ்வீதியானது, வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தினுடைய நிருவாகத்தின் கீழ் உள்ளது. கல்முனை மாநகர சபையிடமிருந்து அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டு, கோழி இறைச்சிக் கடை நடத்துகின்றவர்கள், சட்டத்துக்கு முரணான வகையில், தமது கோழிக் கழிவுகளை இவ்வாறு வீசுகின்றனர்.

குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் அதிகளவான கோழிக் கழிவுகள், மூடைகளில் கட்டப்பட்டு, இவ்வீதிகளில் வீசப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் வீட்டுக்கழிவுகளும் இங்கு வீசப்படுகின்றன. எனவே, கல்முனை மாநகரசபையானது, கோழி இறைச்சிக் கடைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் போது, கோழிக் கடைகளின் கழிவுகளை உரிய முறையில், சுகாதாரத்திற்கு கேடுவிளைவிக்காமல் அக்கழிவுகளை உரிய முறையில் அகற்றுவுதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

எனவே, களுவாஞ்சிக்குடி மற்றும் கல்முனை பொலிஸாருடன், கல்முனை மாநகரசபையின் அதிகாரிகள் இணைந்து, இதற்குரிய நடவடிக்கைகளை உடன் எடுத்து பொதுமக்களுக்கான சுகாதார மேம்பாட்டை ஏற்படுத்துமாறு பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.Garbage issue  - 02

Comments