அனைத்து விதமான மிருக பலிகளும் தடைசெய்யப்பட வேண்டும்: ஓமல்பே சோபித தேரர்

🕔 July 23, 2019

மிருக பலிகள் அனைத்தினையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.

மதத்தின் பெயரால் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான மிருக பலி பூஜைகளும் தடை செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“உலகம் மனிதர்களுக்கு மட்டுமானது என சிலர் பிழையாக புரிந்து கொண்டுள்ளனர். மிருகங்கள் பலியிடப்படுவதனை எதிர்க்க வேண்டும். அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.

வட மாகாணத்தில் மிருக பலி பூஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீக்கியமை அதிருப்தி அளிக்கின்றது.

மிருகங்களை எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பதனை அடிப்படையாக கொண்டே அந்த சமூகம் மதிக்கப்படும் என மஹாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் மிருகங்களை கொலை செய்கின்றனர்.

பெரஹராக்களில் யானைகளை பயன்படுத்துவதும் ஒரு வகையிலான மிருக துன்புறுத்தலேயாகும். மிருகங்களை பாதுகாக்கும் வகையில் நாடாளுமன்றில் சட்டமொன்று கொண்டு வரப்பட வேண்டும்” என்றும் சோபித தேரர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்