முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த வேண்டிய தேவை என்ன?
முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீராமல் அமைச்சு பதவியை பெற மாட்டோம் என கூறும் முஸ்லிம் எம் பீக்கள், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தீராமல் முஸ்லிம் திருமண சட்டத்திருத்தம் பற்றிய பேச்சுக்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என சொல்வதற்கு ஏன் முடியாமல் உள்ளனர் என உலமா கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
ரோம் பற்றி எரியும் போது அதன் மன்னன் பிடில் வாசித்தது போன்றதுதான் இலங்கை முஸ்லிம்கள் வாழ்வா சாவா என்றிருக்கும் இன்றைய நிலையில், முஸ்லிம் திருமண சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தத்துக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும், உலமா சபைத் தலைவரையும் கொண்ட குழு, ஐ.தே.க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளதாகவும் உலமா கட்சி விமர்சித்துள்ளது.
முஸ்லிம்களின் பிரச்சினைகளை முதலில் தீருங்கள். அதன் பின்னர் முஸ்லிம் திருமண சட்டம் பற்றி யோசிப்போம் என சொல்ல உலமா சபைக்கோ முஸ்லிம் எம் பீக்களுக்கோ ஏன் துணிவில்லாமல் உள்ளது?
ஐரோப்பாவின் ஆசைக்காக முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற ஐ.தே.கட்சி அரசாங்கம் முயற்சிக்கிறது என்று தெரிந்தும், இது சம்பந்தமாக ஆராயும் குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் உலமா சபை தலைமையும் இடம்பெற ஏற்றுக்கொண்டமை மோசமான முன்னுதாரணமாகும்.
இந்தக்குழு இதனை ஆராய்ந்து ஒரு வாரத்தில் அறிக்கை தருவதாக ஏற்றுக்கொண்டுள்ளது.முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் – முஸ்லிம் திருமண சட்டத்தை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர். அத்தகைய ஒரு முன்னாள் அமைச்சரோடு போராடி, முஸ்லிம் திருமண சட்டத்தில் கைவைக்க வேண்டிய அவசியம் இப்போது இல்லை என்பதை உலமா சபைத் தலைவரால் சாத்தியப்படுத்த முடியாது.
முஸ்லிம் திருமண சட்டத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். அதில் மாற்றம் செய்வதை விடவும், சில உரிமைககை மேலும் சேர்க்க வேண்டும் என்பதும் அதனை உலமாக்களை கொண்ட குழுவின் மூலமே முன் வைக்க வேண்டும் என்பதையும் இப்பிரச்சினை எழுந்த காலம் முதல் சொல்லி வருகிறோம்.
ஆகவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரக்ள் இருவரையும், உலமா சபையினர் இருவரையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள, மேற்படி திருமண சட்டத்தை ஆராய்ந்து அறிக்கை தெரிவிக்கும் குழு உடனடியாக கலைக்கப்பட்டு, முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் இனவாத பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்னெடுக்க அரசாங்கம் முனைய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றோம் எனவும், உலமா கட்சி தெரிவித்துள்ளது.