வாக்குறுதியை மீறி, அவசரகாலச் சட்டத்தை நீடித்தார் மைத்திரி
அவசர காலச் சட்டத்தை மூன்றாவது தடவையாகவும் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி இன்று திங்கட்டகிழமை வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார்.
இனி அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப் போவதில்லை என்று, கடந்த மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையிலேயே, மூன்றாவது தடவையாகவும் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு அடுத்த நாள் முதல் அவசர காலச் சட்டம் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசர காலச்சட்டத்திற்கு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.
அன்று முதல் ஒவ்வொரு மாதமும் 22ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீடித்து வருகின்றார்.
இதன்படி, மூன்றாவது தடவையாகவும் இன்று முதல் எதிர்வரும் ஒரு மாதத்திற்கு, நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக பல வருடங்கள் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசர காலச் சட்டம், யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ரத்து செய்யப்பட்டிருந்தது.
அதன்பின்னர் 09 வருடங்களுக்கு அவசரகாலச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது.