நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது
பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பு ஏற்படுத்தி, நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான திட்டமிடல்களை புறக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்குள் 08 நபர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து, உடனடியாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த தகவல் பொய்யானது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, போலியான தகவலை வழங்கிய 53 வயதுடைய நபர், எல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், குறித்த சந்தேக நபர், வீட்டின் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டையை கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.