லஞ்சம் கொடுப்பதும், அதற்கு இடைத் தரகர்களாகச் செயற்படுவதும் கூட, பாரிய குற்றங்களாகும்

🕔 July 6, 2019

– பாறுக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ் –

ஞ்சம் வாங்குவதை மாத்திரம் குற்றமாக சமூகம் கருதுகிறது. ஆனால் லஞ்சம் கொடுப்பதும் பாரதூரமான குற்றமாகும் என்று, ‘கபே’ எனப்படும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் பதில் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திட்டத்தின் கீழ், சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ( கபே) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கு, ‘கபே’ அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏஸ்.எல். அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“லஞ்சமும் ஊழலும் நாட்டில் பெருகியுள்ளதால்தான், அரசுக்கு செல்ல வேண்டிய வரி – ஒரு சில தனிநபருக்கு செல்கிறது. இதனால் மக்கள் மீது வரிச்சுமை ஏற்றப்படுகின்றது. பொருட்களின் விலையேறுகின்றன.

ஊழல், லஞ்சம் மற்றும் முறையற்ற விதத்தில் சிலர் சொத்துச் சேர்க்க முற்படுகையில், சாதாரண பொதுமக்களே பாதிப்புறுகின்றனர்.

நாட்டில் லஞ்சம் கொடுத்து முறையற்ற விதத்தில் கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கும்போதே இடித்த சம்பவங்கள் நாட்டிலே நடைபெற்றிருக்கின்றன. லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதன் மூலமே நாட்டை முன்னேற்றுப்பாதைக்கு இட்டுச்செல்ல முடியும்.

நாட்டில் லஞ்சமும் ஊழலும் தொடர்ந்தும் அதிகரிக்குமானால் தேசிய வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்படும். இலங்கை போன்ற நாடு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாகவே அன்று தொடக்கம் இற்றை வரை காணப்பட்டு வருகிறது.

லஞ்சம் எடுப்பதும் கொடுப்பதும் இடைத்தரகர்களாக செயற்படுவதும் பாரிய குற்றமாக கருதப்படுகிறது.

இலங்கை போன்ற நாட்டில் லஞ்சம் அதிகரித்தே வருகிறது. இதனால் வெளிநாடுகளில் வட்டியுடன் கடன் பெற்று நாட்டை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு பின்தங்கி அபிவிருத்தியை கண்டு கொள்ளாமல் உள்ளது.

சோமாலியா போன்ற நாடுகளின் வறுமைக்கு, அங்கு லஞ்சம் அதிகரித்தமையும் ஒரு காரணமாகும். அரச அதிகாரிகள் மக்களுடைய வரிப்பணம் மூலமே சம்பளம் பெறுகிறார்கள். அரச திணைக்களங்களை சேர்ந்தோர்கள் மக்களிடத்தில் நியாயமாகவும் நேர்மையாகவும் தங்களது கடமைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

சேவைகளை முடித்துக் கொள்வதற்காக லஞ்சம் வழங்கப்படுகிறது. இதில் அரச அதிகாரிகள் இவ்வாறான செயற்பாடுகளில் கைது செய்யப்பட்டால், வாழ்க்கை தலை கீழாக மாறி சிறைவாசம் அனுபவிக்க நேரிடும். அரச திணைக்களங்களை சேர்ந்ரும், உயர் பதவிகளையுடையோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள் .

லஞ்சம், ஊழல் தொடர்பில் வழக்கு தொடுக்கப்பட்டால், குறித்த நபருக்கு எதிராக மாவட்ட நீதிமன்றம் ஊடாக விசாரணைகள் இடம் பெறாது. கொழும்பில் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

பொது மக்களாகிய நீங்கள் பயமில்லாமல் லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில், லஞ்ச – ஊழல் ஆணைக்குழுவுக்கு அறியத்தாருங்கள். அவசர இலக்கம் 1954 ஊடாகவும் எழுத்து மூலமாகவும் அரச அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை பயமின்றி முன்வையுங்கள். எமது நாட்டை லஞ்ச ஊழலற்ற தேசமாக மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழையுங்கள்” என்றார்.

இதன்போது லஞ்சம் ஊழல் தொடர்பான குற்சாட்டுகளை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரி ரீ.எம்.ரீ. சம்பத் தென்னக்கோன் உரையாற்றுகையில்;

“கையூட்டலை பிள்ளைகளுக்கு வீட்டிலிக்கும் போதே ஊக்குவிக்கும் செயற்பாட்டை சில பெற்றோர்கள் ஏற்படுத்துகின்றனர்.
ஊழல் லஞ்சம் ஆகியவற்றை தவிர்ப்பதும் தடுப்பதும் எவ்வாறு என்பது பற்றியும், சமூக மட்டத்தில் அவற்றைக் குறைத்துக்கொள்வது தொடர்பாகவும் நாங்கள் பல இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்