பொலிஸாரின் துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு தப்பியோட்டம்: மட்டக்களப்பில் பரபரப்பு
– பாறுக் ஷிஹான் –
மட்டக்களப்பு புதூர் பகுதியில் போக்குவரத்துப் பொலிஸாரின் துப்பாக்கியை நபரொருவர் பறித்துக் கொண்டு ஓடியமையினை அடுத்து, அப்பகுதியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இதனையடுத்து அங்கு ராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் சுற்றி வளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர்.
எனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள், போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.