பாரிய வீதி விபத்துகளும், மரணங்களும் நாட்டில் குறைந்துள்ளன: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு
நாட்டில் கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளை விடவும், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் இடம்பெற்ற பாரிய வீதி விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில், அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
2018ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 1552 பாரிய வீதி விபத்துகள் இடம்பெற்றதாகவும், அவற்றில் 1, 632 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 1281 பாரிய வீதி விபத்துகளே நிகழ்ந்ததாகவும், அவற்றில் 1374 உயிரிழப்புகளே ஏற்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, குடிபோதையில் வாகனங்களை ஓட்டுகின்றவர்களைக் கைது செய்வதற்கான ஒரு மாதத்தைக் கொண்ட விசேட வேலைத் திட்டமொன்றினை, நாளை தொடக்கம் பொலிஸார் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.