சஹ்ரானின் மார்க்க போதனையில் கலந்து கொண்ட மருதமுனை நபருக்கு பிணை

🕔 July 3, 2019

– பாறுக் ஷிஹான் –

ஹ்ரான் ஹஷிமீன்   தடைசெய்யப்பட்ட தேசிய தொளஹீத் ஜமாஅத்தின் மார்க்க போதனை நிகழ்வில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த  இளைஞனை  கல்முனை நீதவான் நீதிமன்றம்  நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்தது.

கடந்த மே மாதம் 29ஆம் திகதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட  மருதமுனையை சேர்ந்த ஏ.எச்.நில்ஷாத் என்பவரே இவ்வாறு  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இவரது கைது விடயத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் நடவடிக்கையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட மனு  இன்று புதன்கிழமை நீதவான் ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த நபர் மீதான வழக்கை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் முன்னெடுப்பதற்கான காரணமெதும்  இல்லை என பொலிஸார் அறிவித்ததை அடுத்து, சந்தேகக நபரை பிணையில் விடுவிக்குமாறு கோரி  இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அதற்கான நியாயங்களை முன்வைத்து வாதிட்டனர்.

இவற்றை செவிமடுத்த நீதவான்  சந்தேக நபரை ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், இவ்வழக்கு முடிவுறும் வரை ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்,  கல்முனை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என சந்தேக நபரைப் பணித்ததுடன் வெளிநாட்டு பயணங்களுக்கும் நீதவான் தடையுத்தரவு பிறப்பித்தார்.  

இவ்வழக்கு விசாரணை  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்