கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்த நபருக்கு பிணை: குரல்கள் இயக்க சட்டத்தரணிகளின் முயற்சிக்கு பலன்
கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பைப் படம் பிடித்தார் எனும் சந்தேகத்தின் பேரிரல் நேற்று கைது செய்யப்பட்ட காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது ராபிதீன் (வயது 40) இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கல்முனை நீதிவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இவருக்கு பிணை வழங்கப்பட்டது.
இவருக்காக கல்முனை நீதவான் நீதிமன்றில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகளான இயாஸ்தீன் இத்ரீஸ்,சுஹால்ஸ் பிர்தௌஸ், இன்னும் சில சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜரானார்கள்.
முன்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஒரு வருடத்துக்கு முன்னர், தான் நிர்மாணப் பணியொன்றைச் செய்ததாகவும் தன்னால் பூர்த்தி செய்யப்பட்ட பணியினை புகைப்படம் எடுத்ததாகவும் அதனை அவதானித்த சிலர் சந்தேகம் கொண்டு தன்னை தாக்க வந்ததாகவும் இதன்போது ராபிதீன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சந்தேக நபர் தொடர்பில் உண்மையான நிலமையை மன்றுக்கு சட்டத்தரணிகள் எடுத்து இயம்பியதுடன், இந்த சந்தேக நபர் தொழில் நிமித்தமே புகைப்படம் எடுத்து இருந்தார் என்பது மாத்திரமல்லாது இலங்கையில் எங்கேயாவது படம் எடுப்பது பிழையாகக் கருதப்படாது என்பதையும்
மன்றுக்கு விளக்கினர்.
இந்த வாதத்தில் உள்ள நியாயமான தன்மையை அவதானித்த நீதவான் குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்க உத்தரவிட்டார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையை படம் பிடித்தார் எனக் கூறி, நேற்றைய தினம் சந்தேகத்தின் பேரில், குறித்த நபரை கல்முனை பொலிஸார் கைது செய்திருந்தனர்.