ரத்ன தேரரின் ‘முயல்’

🕔 July 2, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.   

குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும்.  

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது இனவாதிகளும், அவர்களுக்குத் துணைபோகும் ஊடகங்களும் நீண்ட காலமாகவே, எக்கச்சக்கமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர், பயங்கரவாதிகளுடன் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்புகள் இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்தன தேரர், விமல் வீரவன்ச போன்றோர், மிக வெளிப்படையாகவே பேசி வந்தனர்.  

ரிஷாட் பதியுதீன், வில்பத்துக் காடுகளை அழித்துள்ளார், வடக்கில் பல்லாயிரம் ஏக்கர் காணிகளை, சட்டவிரோதமாகச் சொந்தமாக்கி வைத்திருக்கிறார், போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றார் போன்ற பல குற்றச்சாட்டுகளை, மிக நீண்ட காலமாகவே, சிலர் முன்வைத்து வருகின்றனர்.   

ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னர், ரிஷாட் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் பாரதூரமாகின. ரிஷாட் பதியுதீனுக்கும் சஹ்ரான் கும்பலுக்கும் தொடர்புகள் உள்ளன; பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ‘சதொச’ நிறுவனத்துக்குரிய வாகனங்களை, ரிஷாட் பயன்படுத்தினார்; ரிஷாட் பதியுதீனுடைய தாயின் சகோதரியுடைய மகள் ஒருவர்தான், தெமட்டகொட பகுதியில் தற்கொலைக் குண்டு வெடிப்பை நடத்தினார் என்று, மேலும் பல குற்றச்சாட்டுகள், ரிஷாட் மீது சுமத்தப்பட்டன.  

மிகச் சரியாகச் சொன்னால், ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி உள்ளிட்ட பலர் மீது கூறப்பட்டவற்றில், மிக அதிகமானவை அவதூறாகும். குறிப்பாக, ரத்தன தேரர்,  விமல் வீரசன்ச போன்றோர் தமக்கிருக்கும் சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி, நாடாளுமன்றில் பேசும்போது, ரிஷாட் பதியுதீன் தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகள், வெறும் அவதூறுகள் என்பது இப்போது நிரூபணமாகி வருகின்றது.  

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருக்குமானால், அதனைப் பொலிஸாரிடமோ அல்லது அவ்வாறான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்குத் தகுதி உடையோரிடமோ முறையிடுவதே பொருத்தமானதாகும். அதனைச் செய்யாமல், நாடாளுமன்றில் வெறுமனே ரிஷாட் மீது அபாண்டங்களைக் கூறி வருகின்றமை, இனவாதச் செயற்பாடுகளாகும்.   

உதாரணமாக, ஈஸ்டர் தினத்தன்று தெமட்டகொட பகுதியில், தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய பெண், ரிஷாட் பதியுதீனுடைய தாயின் சகோதரியின் மகள் என்று, விமல் வீரவன்ச நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த ரிஷாட், தனது தாய்க்கு சகோதரிகளே கிடையாது என்று கூறியதோடு, “இப்படி இல்லாத பொல்லாத விடயங்களையெல்லாம் கூறிவருகின்ற விமலின் மூளையைப் பரிசோதிக்க வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார்.  

ஈஸ்டர் தினத் தாக்குதலையடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கி விடப்பட்டிருந்த இனத் துவேச சூழ்நிலைக்குள், ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோரைத் தள்ளி விடுவதற்கு, ரத்தன தேரர், விமல் வீரவன்ச போன்றோர் கடுமையாக முயன்றார்கள். ஆனால், அவை பலிக்கவில்லை.  

சஹ்ரான் கும்பல் நடத்திய பயங்கரவாதச் செயற்பாடுகளுடன், ரிஷாட் பதியுதீனுக்குத் தொடர்புகள் எவையும் கிடையாது என்று, பதில் பொலிஸ் மா அதிபர் நியமித்த விசேட பொலிஸ் குழு அறிவித்திருக்கிறது. ஈஸ்டர் தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த ரிஷாட் பதியுதீனிடம், இந்த விடயத்தைத் தெரிவுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

ஆனாலும், விமல் மற்றும் ரத்தன தேரர் உள்ளிட்டவர்கள் தமது இனவாத மனநிலையிலிருந்து மீளவில்லை. குருணாகல் போதனா வைத்தியசாலையில், கடமையாற்றி வந்த டொக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான சாட்சிகள் எவையும் இல்லை என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருக்கிறது. ஆயிரக்கணக்கான சிங்களப் பெண்களுக்கு, சட்டவிரோதமாகக் குழந்தைப் பேறின்மையை ஏற்படுத்தினார் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், டொக்டர் ஷாபி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  

ஆனாலும், ரத்தன தேரர் போன்றோரின் இனவாதம் குறைந்தபாடில்லை. “டொக்டர் ஷாபி தொடர்பில் இவ்வாறானதோர் அறிக்கையை நீதிமன்றில் வழங்கியதை அடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீது இருந்த ஒட்டுமொத்த நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது” என்று, ரத்தன தேரர் கூறியுள்ளார். அதாவது, தமக்குச் சாதகமற்ற விடயத்தை யார் கூறினாலும், அது தவறாகும் என்கிற மனநிலையில் ரத்தன தேரர் இருக்கின்றார். இது ஆபத்தானதாகும்.   

தன்மீது, விமல் வீரவன்ச, ரத்தன தேரர் போன்றோர் கூறிவரும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று, ஆரம்பத்திலிருந்தே ரிஷாட் பதியுதீன் கூறிவருகின்றார். தனக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று, நாடாளுமன்றில் ரிஷாட் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது. இந்த நிலையில், ரிஷாட் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார், பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கும் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் தொடர்புகள் எவையும் கிடையாது என்று அறிவித்திருக்கிறார்கள்.   

ஆனால், ‘அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது, ஆட்டத்தை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்’ என்று, ரத்தன தேரர் அடம்பிடிக்கிறார்.   

தற்போதைய சூழ்நிலையில் ரத்தன தேரர், தன்னை நாடாளுமன்ற உறுப்பினராகக் காட்டிக் கொள்வதை விடவும், பௌத்த பிக்குவாக அடையாளப்படுத்திக் கொள்வதையே அதிகம் முன்னிலைப்படுத்தி வருகின்றமையைக் காணக் கூடியதாக உள்ளது. தலதா மாளிகையின் முன்பாக அவர் உண்ணா விரதம் இருந்தமை, கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடந்த உண்ணாவிரதக் களத்துக்குச் சென்றிருந்தமை உள்ளிட்ட அவரின் செயற்பாடுகள் மூலம், இதனைப் புரிந்து கொள்ள முடியும்.  

மக்களுக்கு உண்மையினையும் நல்லுபதேசங்களையும் கூற வேண்டிய மதகுருவான ரத்தன தேரர், அடுத்த மனிதர்கள் குறித்து அபாண்டங்களைக் கூறுவது, பௌத்த தர்மத்துக்கு எதிரானதாகும். 

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு பெண்ணுக்கும், சட்ட விரோதமாக குழந்தைப் பேறின்மையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை டொக்டர் ஷாபி மேற்கொள்ளவில்லை என்று, அவருடன் பணியாற்றியவர்களே குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சாட்சியம் வழங்கியுள்ளனர். இந்த நிலையில், இதையெல்லாம் நீதிமன்றுக்குத் தெரிவித்த குற்றப் புலனாய்வுப் பிரிவு சொல்வது பொய் என்று, ரத்தன தேரர் கூறுவது,  ‘நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான்’ என்றவனின் கதைக்கு ஒப்பானதாகும்.  

ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் சிறிய, சிறிய விடயங்களுக்காகவெல்லாம் முஸ்லிம் பொதுமக்கள் மீது, பாரதூரமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவர்களைப் பிணையின்றி, விளக்கமறியலில் அடைத்து வைக்கும் காரியங்களையெல்லாம் பொலிஸார் செய்திருக்கின்றனர். சிறிய கத்திகளை வைத்திருந்தமை; தர்மச் சக்கரத்தின் வடிவிலான உருவத்தைக் கொண்ட ஆடையை அணிந்திருந்தமை; அரபு எழுத்துகளைக் கொண்ட புத்தகங்களை வைத்திருந்தமை போன்ற செயல்களைக் குற்றங்களாகக் காட்டி, ஏரானமான முஸ்லிம்களைப் பொலிஸார் சிறையில் அடைத்து வைத்திருக்கின்றனர். ஆனால், ரத்தன தேரர் போன்றோர், மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில், பொலிஸார் கண்டும் காணாமல் இருக்கின்றமை அநீதியாகும்.  

  • ஈஸ்டர் தினத் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம்கள் மீதான குரோதத்தை, மிக அப்பட்டமாக ரத்தன தேரர் வெளிப்படுத்தியுள்ளார்.  
  • ஆளுநர்கள் ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி,  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் மீது நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர்களின் பதவிகளைப் பறிக்குமாறு உண்ணாவிரதம் இருந்தமை.  
  • டொக்டர் ஷாபி மீது அபாண்டங்களை தொடர்ந்தும் கூறி வருகின்றமை.  
  • டொக்டர் ஷாபி தொடர்பில் விசாரணைகளை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீது, மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டமை.  
  • எந்தவித அதிகாரங்களும் வழங்கப்படாத நிலையில், கல்முனை உப பிரதேச செயலக விவகாரத்தில் மூக்கு நுழைத்தமை.  

உள்ளிட்ட பாரதூரமான பல சட்டவிரோத செயற்பாடுகளில் அத்துரலியே ரத்தன தேரர் மிக அண்மைக் காலத்தில் ஈடுபட்டிருக்கின்றார். ஆனால், அவருக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, பொலிஸார் பக்கச் சார்பாக நடக்கின்றார்கள் என்கிற சந்தேகம் முஸ்லிம்களிடத்தில் ஏற்பட்டுள்ளது என்பதையும் இங்கு பதிவு செய்தல் அவசியமாகும்.  

எனவே, ரத்தன தேரர் போன்றோருக்கு எதிராக பொலிஸார் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்த்து விடும் வகையிலான ரத்தன தேரர் போன்றோரின் பேச்சுகளையும் செயற்பாடுகளையும் சட்டத்தை நிலைநாட்டுவோர் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.  

ரத்தன தேரரை இவ்வாறு தொடர்ந்தும் அனுமதிக்கத் தொடங்கினால், ஒரு கட்டத்தில், “தான் பிடித்த முயல், கால்கள் இன்றியே துள்ளி விளையாடியதாக” அவர் கூறும் நிலையும் ஏற்படலாம்.     

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (02 ஜுன் 2019)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்