டொக்டர் ஷாபி விவகாரம்: சிஐடி யினர் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது என்கிறார் ரத்ன தேரர்

🕔 June 27, 2019

குற்றப் புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி) மீதான நம்பிக்கை ஒட்டுமொத்தமாக இல்லாமல் போய்விட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எஸ். திசேரா என்பவர், டொக்டர் ஷாபி தொடர்பில் நீதிமன்றத்தில் முன்வைத்த விளக்கங்களினாலேயே, ஒட்டுமொத்த சி.ஐ.டி மீதான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளது என அவர் கூறியுள்ளார்.

குருணாகல் நீதிமன்றத்தில் டொக்டர் ஷாபி தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று வியாழக்கிழமை நிறைவடைந்ததன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

“இலங்கையில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற என, விஷேட வைத்தியர் தன்னிடம் குறிப்பிட்டதாக திசேரா மன்றில் தெரிவித்தார். அந்த விஷேட வைத்தியர் யார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 

முரண்பாடான கருத்துக்களினால் சி.ஐ.டியின் மீதான நம்பிக்கை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.டியின் உயர் அதிகாரிகள் முதலில் இவர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் தலையீடுகளினாலேயே சுயாதீன விசாரணைகள் இடம்பெறவில்லை. இவ்விவகாரத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வோம். 

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பிரதான வைத்திய பிரிவு இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் இந்தியாவிலுள்ள சிறப்பு வைத்திய நிபுணர்களை இலங்கைக்கு வரவழைத்து சுயாதீன பரிசீலனைகள் இடம்பெறும்” என்றும் இதன்போது அவர் கூறினார்.

டொக்டர் ஷாபி தொடர்பான வழக்கு, இன்றைய தினம் குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் காரியவசம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டொக்டர் ஷாபி மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இல்லை என, சி.ஐ.டியினர் மன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்