கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை
🕔 June 26, 2019
– பாறுக் ஷிஹான் –
ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், சங்ரிலா தற்கொலைக் குண்டுதாரியுமான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28) இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியை, பொலிஸ் பரிசோதகர் பஸீல் கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்.
இவ்வாறு ஆஜர் படுத்தப்பட்ட ஷஹ்ரானின் மனைவி தொடர்பான விசாரணை நீதிவானின் மூடிய அறையில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த இவ்விசாரணையில் 03 சாட்சியாளர்கள் வேறு வேறாக ஆஜர்படுத்தப்பட்டு நீண்ட நேர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
பின்னர் சஹ்ரானின் மனைவி கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான விடயங்களையும், தான் அறிந்த தாக்குதல் விடயங்களையும் அந்த வாக்குமூலத்தில் ஹாதியா தெரிவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி வீட்டுத்தொகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு வெடிப்பில் 15 பேர் பலியான நிலையில், அங்கிருந்து சஹ்ரானின் மனைவியும், அவரின் 03 வயது மகள் பாத்திமா ருஸையா என்பவரும் உயிர் தப்பியிருந்தனர்.
இன்றைய தினம் நீதிமன்ற வளாகத்திலும் பொலிஸ் நிலையத்திலும் சஹ்ரானின் குழந்தைபொலிஸ் உத்தியோகத்தர்களுடன் செல்லமாக விளையாடி கொண்டிருந்தமையைக் காண முடிந்தது.