முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை விதித்த, பிரதேச சபைத் தவிசாளருக்கு, நீதிமன்றம் அழைப்பாணை
– அஹமட் –
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தங்கொட்டுவ சந்தையில் தொழில் செய்வதற்குத் தடைவிதித்த வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
தடை விதித்தமைக்கான விளக்கத்தையும் அவர் நீதிமன்றில் வழங்க வேண்டுமெனவும் பணிக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ பிரதேச சபையின் தவிசாளர் கே.வி. சுசந்த பெரேரா, நேற்று 24ஆம் திகதியிட்டு, தங்கொட்டுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இது தொடர்பில் கடிதமொன்றினை எழுதியிருந்தார்.
தங்கொட்டுவ வாராந்த சந்தைக்கு முஸ்லிம் வியாபாரிகள் வருகை தருவது தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என, அங்குள்ள ஏனைய வியாபாரிகளும் பொதுமக்களும் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, முஸ்லிம் வியாபாரிகள் அங்கு தொழில் செய்வதை தற்காலிகமாக தடை செய்வதாக, வென்னப்புவ பிரதேச சபைத் தவிசாளர் அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் ஊடகங்களிலும் கவனத்துக்குரிய செய்தியாக மாறியிருந்தது.
பிரதேச சபையின் தீர்மானமாக அன்றி, தனது தனிப்பட்ட தீர்மானமாகவே, இந்த தடையினை தவிசாளர் விதிப்பதாக அறிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.