ஓநாய் அழுத கதை
– முகம்மது தம்பி மரைக்கார் –
“சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது” என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.
ஒரே மொழியைப் பேசுகின்ற, ஒரே நிலத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், கடந்த காலம் ஏற்படுத்திய கசப்புகள், இவ்வாறான மனப்பதிவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன. இந்த நிலைக்கு இவர்களில் யார் காரணம்? இந்த இரண்டு சமூகங்களிலும் யார் சரி, யார் பிழை? என்கிற கேள்விகள் அபத்தமானவையாகும்.
ஆயினும், இந்த நிலைவரத்துக்கு, நாங்கள் எந்த வகையில் காரணமாக இருந்தோம் என்கிற சுயபரிசோதனைகளை, இரண்டு சமூகங்களும் செய்து கொள்ளுதல் அவசியமாகும்.
ஒரு காலகட்டத்தில், தமிழர்களுடன் இணைந்து முஸ்லிம்கள், தமது அரசியலைச் செய்து வந்தார்கள். மூத்த அரசியல் தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்களுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் போன்றோர் இணைந்து, அரசியலரங்கில் பயணித்திருக்கின்றனர். “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழீழத்தைப் பெற்றுத் தரவில்லையென்றால், தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவேன்” என்று, ஒரு காலத்தில் தமிழர்களின் அரசியல் மேடைகளில் அஷ்ரப் கூறுமளவுக்கு, இரண்டு சமூகங்களும் நெருக்கமாக இருந்துள்ளன.
ஆனால், அதே அஷ்ரப்தான், முஸ்லிம்களுக்கு ஓர் அரசியல் கட்சி அவசியம் என்கிற முடிவுக்கு, இறுதியில் வரவேண்டியிருந்தது. ஒரு முஸ்லிமாக, தமிழர் அரசியல், அவருக்கு ஏமாற்றத்தைத் தந்திருந்தது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.
அதேபோன்று, சிங்களத்துக்கு எதிராக 30 வருடங்கள் ஆயுதமேந்திச் சண்டையிட்ட தமிழர் சமூகமானது, இப்போது கிழக்கு மாகாணத்துக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் வேண்டாம் என ஆர்ப்பாட்டங்கள் நடத்தி விட்டு, அந்த இடத்துக்கு வந்த ஷான் விஜேலால் டி சில்வாவை அமைதியாக ஏற்றுக் கொண்டுள்ளமையை வைத்தே, தமிழர் – முஸ்லிம்களுக்கு இடையிலான உடைவின் உக்கிரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், இந்த உடைவுகளும் பிளவுகளும் ஏற்பட்ட காலகட்டங்களை, மிக நூதனமாக நாம் திரும்பிப் பார்க்கும் போது, அங்கு பேரினவாதம் நடத்தியிருந்த ‘விளையாட்டு’களைப் புரிந்து கொள்ள முடியும்.
யுத்த காலத்தில், தமிழர் ஆயுத இயக்களிடமிருந்து முஸ்லிம்கள் நெருக்குவாரங்களை எதிர்கொண்ட வேளைகளில், முஸ்லிம்களுக்கு உதவும் மீட்பர்களாக சிங்களப் பேரினவாதம் தன்னைக் காட்டிக் கொண்டது. முஸ்லிம்களை சிங்களப் பேரினவாதம் அப்போது அரவணைத்துக் கொண்டது.
அந்த நிலைவரத்துக்கு, தமிழர் ஆயுத இயக்கங்களின் புத்திசாதுரியமற்ற நடத்தைகளும் காரணமாகின. ஒரு கட்டத்தில், முஸ்லிம் சமூகத்தை விடுதலைப் புலிகள் இயக்கம், முற்று முழுதாகவே பகைத்து, கைகழுவி விட்டமையானது, சிங்களப் பேரினவாதத்துக்கு முஸ்லிம்களைத் தம்பக்கம் ஈர்த்துக்கொள்ள மிகவும் இலகுவாயிற்று.
முஸ்லிம்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இருந்து வந்த நல்லுறவு தொடர்ந்திருந்தால், அரச படைகளால் புலிகளை இன்றைக்கும் தோற்கடிக்க முடிந்திருக்காது என்பதை, நேர்மையுடன் பேசும் தமிழர்களே ஒத்துக் கொள்கின்றனர். தமிழர்களிடமிருந்து முஸ்லிம்களைப் பிரித்தாள்வதற்கு, சிங்களப் பேரினவாதம் அப்போது மேற்கொண்ட தந்திரங்கள், சூழ்ச்சிகள் குறித்து ஏராளமான கதைகள் உள்ளன.
யுத்தம் முடிவதற்கு முன்னர், சிங்களப் பேரினவாதத்தின் கண்களுக்குள், தமிழர்கள் உறுத்திக் கொண்டிருந்தார்கள். யுத்தம் முடிந்த பிறகு, முஸ்லிம்கள் உறுத்தத் தொடங்கினார்கள்.
இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதார ரீதியான வளர்ச்சி, பேரினவாதத்தின் கண்களை உறுத்தத் தொடங்கியது. அதனால், யுத்தம் முடிந்த கையோடு, முஸ்லிம்கள் மீது தனது வேட்டையை சிங்களப் பேரினவாதம் தொடங்கியது.
யுத்தத்துக்குப் பிறகு, முஸ்லிம்கள் மீது சிங்கள பேரினவாதிகள் மேற்கொண்ட வன்முறைகளின் போதெல்லாம், முஸ்லிம் மக்களின் பொருளாதாரமே இலக்கு வைத்துத் தாக்கப்பட்டமையைக் காண முடியும். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரே, “முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரியுங்கள்” என்று கூறியமையின் மூலம், சிங்களத்தின் கண்களில் முஸ்லிம்களின் பொருளாதாரமே உறுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
‘சும்மா ஆடிய பேய்க்கு, ஒரு கொட்டு முழுக்கம் போதாதா’ என்பது போல, முஸ்லிம்களுக்கு எதிராகத் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்த பேரினவாதத்துக்கு, சஹ்ரான் கும்பலின் பயங்கரவாதத் தாக்குதலானது, முஸ்லிம்களைக் கருவறுக்க, மேலும் சந்தர்ப்பத்தை உருவாக்கி விட்டுள்ளது.
முஸ்லிம்களின் உணவு, உடை, அறபு மொழிப் பயன்பாடு ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பேரினவாதம் தனது மூக்கை இஸ்டத்துக்கு நுழைத்துக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம்களுக்கான திருமணச் சட்டத்தை இல்லாமல் செய்வதற்காக, பேரினவாதம் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. “நாட்டில் ஒரே சட்டம்தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கக் கூடாது” என்று, பேரினவாதிகள் கோஷமிட்டுக் கொண்டு திரிகின்றனர். இந்தக் கோஷத்துக்கு கல்முனையில் வைத்து தமிழர்கள் கரகோஷம் செய்தமையைக் காண முடிந்தது.
கல்முனையிலுள்ள உப – பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த வேண்டும் என்று, தமிழர்கள் கோரிக்கை விடுத்து, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கடந்த வாரம் ஆரம்பித்திருந்தனர். கல்முனை மாநகர சபை உறுப்பினர், இந்து மதகுரு உள்ளிட்டோருடன், கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் இந்த உண்ணாவிரதத்தில் இணைந்திருந்தார்.
மறுபுறமாக, தமிழர் தரப்புக் கோருகின்றமை போல், இனரீதியாகவும் நிலத்தொடர்பற்ற வகையிலும் பிரதேச செயலகமொன்றை வழங்கக் கூடாது என்று கூறி, முஸ்லிம்களும் சத்தியாக்கிரக நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், தமிழர்களிடம் தமது செல்வாக்கை இழந்துள்ள கருணா அம்மான் போன்றோர், உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்துக்குச் சமூகமளித்து, அங்கு முஸ்லிம்களுக்கு எதிரான குரோதப் பேச்சுகளை அள்ளி வீசிவிட்டுச் சென்றிருந்தனர்.
பின்னர், தமிழர் தரப்பின் உண்ணா விரதம் நடைபெற்ற இடத்துக்கு அத்துரலியே ரத்தன தேரர் வருகை தந்தார். இறுதியாக, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வருகை தந்து, உண்ணாவிரதத்தை முடித்து வைத்து விட்டுச் சென்றார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில், பிரதமரின் செய்தியுடன் வருகை தந்திருந்த அமைச்சர்கள் மனோ கணேசன், தயாகமகே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர், ஆர்ப்பாட்டக்காரர்களால் அவமதிக்கப்பட்டுள்ளனர். சுமந்திரன் மீது தாக்குதுல் நடத்துவதற்கும் அங்கு முயற்சிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆக, தமது பிரதிநிதிகளைக் கூட நம்பாமல், பௌத்த தேரர்களிடம் தமது எதிர்காலத்தைக் கையளிக்கும் நிலைக்குத் தமிழர் சமூகம் தள்ளப்பட்டுள்ளமையானது, பேரினவாதத்துக்குக் கிடைத்த மிகப்பெரும் வெற்றியாகும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்தில், முஸ்லிம்களுடன் தமிழர்களை மோதவிட்டு, கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு பேரினவாதம் விரும்புகிறது என்பதை மிகத்துல்லியமாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
தமிழர்களுக்குப் பிரதேச செயலகமொன்று கிடைக்கவில்லை என்பதற்காக அவர்கள் மீது பரிதாபப்பட்டு, பௌத்த மதகுருமார் கல்முனைக்குப் படையெடுப்பதைப் பார்க்கையில், ‘ஆடு நனைகிறதென்று, ஓநாய் அழுத கதை’ நினைவுக்கு வருகிறது.
கல்முனையில் உப – பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி, தமிழர் தரப்பு உண்ணாவிரதமிருந்த இடத்துக்கு, மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரும் வருகை தந்து, தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசியமையானது கேலிக்கூத்தாகவே தெரிந்தது.
மட்டக்களப்பில் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மிகப் பகிரங்கமாக மேற்கொண்டு வருபவர் அம்பிட்டிய சுமணரத்ன தேரர். சில வருடங்களுக்கு முன்னர், மட்டக்களப்பு – பதுளை வீதியிலுள்ள பாசிக்குடாவெளி பிரதேசத்தில் புத்தர் சிலை வைப்பதற்காக, தமிழர் ஒருவரின் தனியார் காணிக்குள் நுழைந்து, அவர் நடந்திய அட்டகாசம், இன்னும் நினைவில் இருக்கிறது.
பட்டிப்பளைப் பிரதேசத்தில், கிராம சேவையாளரான தமிழர் ஒருவரைத் தாக்குவதற்கு முயற்சித்த சுமணரத்ன தேரர், அந்தக் கிராம சேவகரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தமையையும் சமூக வலைத்தளங்களில் வீடியோவாகக் காணக்கிடைத்தது. தேரரின் இந்தச் செயற்பாடுகளைக் கண்டித்து, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் ஊடகங்களுக்கு பேட்டியளித்து இருந்தமையையும் மறந்து விட முடியாது.
இதில் பகிடி என்னவென்றால், அதேதேரருடன்தான் கல்முனையில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்துக்கு வியாழேந்திரன் சமூகமளித்திருந்தார். அதற்குச் சில வாரங்களுக்கு முன்னர், கிழக்கு மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஹிஸ்புல்லாவை பதவி விலக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நடத்திய சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, வியாழேந்திரனுக்கு நீராகாரம் வழங்கியவரும் இந்த சுமணரத்ன தேரர்தான்.
ஆக, முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்தில், பேரினவாதிகளுடன் கைகோர்த்துக் கொள்வதற்குத் தமிழர்கள் தயாராகி விட்டார்கள் என்கிற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு விட்டது. இது, தமிழர் – முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமான விடயமல்ல என்பதை மட்டும், இப்போதைக்குக் கூறி வைக்க முடியும்.
தமிழர்களை நசுக்க, முஸ்லிம்களையும் முஸ்லிம்களை நசுக்க தமிழர்களையும் பேரினவாதம் கருவியாகப் பயன்படுத்துகிறது என்பதை, தமிழர் – முஸ்லிம் சமூகங்கள் விளங்கிக் கொண்டும், அந்தப் பொறிக்குள் மாட்டிக் கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
ஆடுகளின் துயரங்களை ஓநாய்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் யதார்த்தமாகும்.
நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (25 ஜுன் 2019)