தலை நிமிரும் உண்மைகள்

🕔 June 25, 2019

– அப்துல் ரஹ்மான் –

யிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும், இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்து வந்த போதும், பொலிஸ் விசாரணையின் மூலம்  இந்த பயங்கரவாதத்துடன்  அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென பொலிஸ் திணைக்களம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.  

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து, உண்மைகளை கண்டறிய நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை கண்டறியும் வகையில், அவரை நாளை புதன்கிழமை தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைத்துள்ளது. அத்துடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரிகளும், இந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

முஸ்லிம் பெயர் தாங்கிய பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை, ரிஷாத் பதியுதீன் உட்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டித்தனர். இது குறித்து கவலையடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அத்தனை பயங்கரவாதிகளையும் கண்டுபிடித்து உச்சபட்ச தண்டனை வழங்குமாறு முஸ்லிம் சமூகம் அறிவித்திருந்தது. அதுமாத்திரமின்றி இவர்களை பூண்டோடு அழிக்க தமது பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்கி அதனை குறுகிய காலத்தில் செயற்படுத்த உதவினர்.

இந்த நிலையில்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஆசாத் சாலி அகியோர் மீது கடும்போக்குவாத அரசியல்வாதிகள் குறிவைத்து அவர்களின் அரசியல் வாழ்வை அழித்தொழிப்பதற்கு திட்டமிட்டு பழிகளை சுமத்தினர். அது மாத்திரமின்றி ஊடகங்கள் மூலம் தினமும் அபாண்டமான கருத்துக்களையும் விஷத்தையும் கக்கி வந்தனர். 

இதற்கு மேல் ஒரு படி சென்று  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை  கொண்டுவந்தனர். அதற்கான விவாத திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தும் கூட, அதனை ஏற்றுக்கொள்ள தைரியமற்றவர்கள், தேரரான அதுரலியவை முன்னிறுத்தி கண்டியில் உண்ணாவிரதம் ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தனர்.

இந்த போராட்டம் வன்முறை வடிவம் எடுத்ததால், அச்சமுற்ற முஸ்லிம் அமைச்சர்கள் பாரிய பாதிப்புக்களிலிருந்து நாட்டையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாக்கும் நோக்கில் தமது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்தனர். அந்த வகையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானமும் செயலிழந்தது. 

இருந்த போதும் கடும்போக்கு இனவாதிகள் ரிஷாத் பதியுதீன் மீதான குரோத உணர்வுகளையும் வன்ம போக்குகளை தொடர்ச்சியாக ஊடகங்களின் மூலமும் நாடாளுமன்றத்திலும் மேற்கொண்டனர். இதனால் கவலையுற்ற முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மைகளை வெளிப்படுத்துமாறு சபாநாயகரிடம் வேண்டு கோள்விடுத்திருந்தார். சபாநயகர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரையும்  பணித்திருந்தார். 

இதன் பின்னர் ரிஷாத் பதியுதீன், அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு 03 பேர் கொண்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

அது மாத்திரமின்றி இவர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் ஏதாவது இருந்தால் பொலிஸ் திணைக்களத்தில் முறையிடுமாறு பொதுமக்களை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கோரியிருந்தார். அதற்கான காலக்கெடு ஒன்றும் வழங்கப்பட்டது .

இலங்கை அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறான கோரிக்கை ஒன்று பொலிஸ் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட்டிருந்தமை வரலாற்றில் பதியப்படவேண்டியதொன்றாகும்.  .

இந்த மூவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முறைப்பாட்டாளர்கள் பதிவு செய்தது மாத்திரமின்றி அதன் பிற்பாடு, திட்டமிட்டு ஊடகங்களின் வாயிலாக ரிஷாத் பதியுதீன் தொடர்பாக, மிக மோசமான அபாண்டங்களை பரப்பி மக்களை தவறான வழியில் திசைதிருப்பும் நாடகம் ஒன்றும் இடம்பெற்றது. 

 ரிஷாத் பதியுதீனின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உச்ச கட்ட முயற்சிகளை இனவாத அரசியல்வாதிகளும் ஆட்சிக் கதிரை பிடிக்க எத்தனித்தவர்களும் மேற்கொண்டனர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சமர்ப்பித்த பின்னர்; “ரிஷாத் பதியுதீனுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டு – ஊருக்கு வர வேண்டாம்” என்று நாடளாவிய ரீதியில் கட்அவுட்களையும் பெனர்களையும் காட்சிப்படுத்தும் கேவலமான நடவடிக்கைகளையும் இனவாத கட்சி ஒன்று அரங்கேற்றிருந்தது.

எனினும் இறைவனின் உதவியினால் பொலிஸ் விசாரணைகள் அனைத்தும்  முடிவடைந்து, பயங்கரவாதத்துடன் ரிஷாத் பதியுதீனுக்கு எந்த தொடர்பும் இல்லையெனவும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சமூகத்திற்காக அர்ப்பணிப்புக்களுடன் செயலாற்றிவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரை இறைவன் பாதுகாத்துள்ளதுடன் அவருக்காக பிரார்த்தித்த அத்தனை நல்லுள்ளங்களினதும் பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக்கொண்டிருக்கின்றான்.  உண்மை ஒருபோதும் அழிவதில்லை. என்பது சமூகத்தலைவர் ரிஷாத் பதியுதீன் விடயத்தில் பொய்யாகவில்லை.

நாடாளுமன்றத்தில் நாளை மாலை 03 மணிக்கு நடைபெறும் தெரிவுக்குழு விசாரணைக்கு ரிஷாத் பதியுதீன் முகம்கொடுக்கவுள்ளார். அதுமாத்திரமின்றி கைது செய்யப்பட்ட ஒருவரை விடுதலை செய்யுமாறு ராணுவ தளபதிக்கு ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்ய ராணுவத்தளதியும் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளில் அவர் வெற்றி பெற நல்ல மனோ தைரியத்தை வழங்க வேண்டுமென இறைவனிடம் பிரார்த்திப்போம். அதன் மூலம் சமூகம் தலைநிமிர்ந்து வாழவும்  சமூகத்தின் மீதான பழி நீங்கவும் பிரார்த்திப்போம். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்