சஹ்ரானை கொல்வதற்கு, புலனாய்வு அதிகாரியிடம் அனுமதி கேட்டேன்: காத்தான்குடி தவிசாளர் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்கள்

🕔 June 25, 2019

ஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரானை, தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு, புலனாய்வு பிரிவு அதிகாரியை தான் கேட்டதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார்.

ஸஹ்ரானின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து, தான் கடந்த ஏப்ரல் 14ம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்தே, இவ்வாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு, நகரசபைத் தலைவர் அஸ்பர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே, இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

“ நீண்டகாலமாக காத்தான்குடியில் பல தௌஹீத் ஜமாத் அமைப்புகள் இருக்கின்றன. குழுவென்று பார்த்தால் 06 குழுக்கள் இருந்தன. எனினும், அவற்றில் ஸஹ்ரானின் தேசிய தௌஹீத் ஜமாத் மாத்திரமே அடிப்படைவாத வழியில் சென்றது. அது சில வருடத்துக்கு முன்னரே தோற்றம் பெற்றது. இறுதியில் 2017 மார்ச் மாதத்தின் பின்னர் காணாமல்போனது.

ஸஹ்ரானின் குழுவில் சுமார் 200 பேர் இருந்திருக்கக் கூடும். ஸஹ்ரானின் அபாயகரமான பேச்சுகளைக் கேட்டு அதிலிருந்து பெரும்பாலானோர் விலகியிருந்தனர். அவர்கள், ஸஹ்ரான் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்ந்து அவரை புறக்கணித்தனர். அதன்பின்னர் அவர்களில் 100 பேருக்கும் குறைவானோரே எஞ்சியிருந்தனர்.

தற்போது அந்த அமைப்பில் எவருமே இல்லை. இறுதியில் ஸஹ்ரானின் உறவினர்கள் சிலரே மீதமிருந்தனர். அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

நௌபர் மௌலவி என்று ஒருவர் இருந்தார். அவர் குருணாகல் பிரதேசத்தச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து சுமார் 15 வருடத்துக்கு முன் காத்தான்குடியிலிருந்து இடம்பெயர்ந்தார். நௌபர் மௌலவியின் தாருல் அதர் அமைப்பிலேயே ஸஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி, தேசிய தெளஹீத் ஜமாத்தை தோற்றுவித்தார். பின்னர் அந்த அமைப்புடன் பிரச்சினைகளை ஏற்படுத்தியதுடன் அதனைச் சார்ந்தவர்களுக்கு ஸஹ்ரான் மரண அச்சுறுத்தலும் விடுத்தார். அவர்கள் ஸஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடும் செய்தனர். இன்றும், ஒரு சாதாரண சமய அமைப்பாக தாருல் அதர் காத்தான்குடியில் செயற்படுகிறது.

அடிப்படைவாத வழியில் சென்ற தேசிய தௌஹீத் ஜமாத், இங்குள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தியது. தேர்தல் காலங்களில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவார். ஏன் என்று கேட்டால், வாக்கு கேட்கும் அனைவரும் தமது மார்க்கத்தை அழிப்பதாக கூறுவார். எந்த இடத்திலும், தாக்குவது, கொல்லுவது பற்றியதாகவே அவர்களது பேச்சு இருக்கும்.

2015ம் ஆண்டு தேர்தல் காலத்தில் எமது குழுவினர்களுடன் அவர்களது பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய மோதல் ஏற்பட்டது. அதன்போது, எமது குழுவினரால் ஸஹ்ரானின் சகோதரன் தாக்கப்பட்டார். ஏனென்றால், அவர்களது கருத்துகளை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதியில் ஸஹ்ரான் குழுவினர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும், பொலிஸுக்கும் சென்று எங்களில் 10 பேரை கைது செய்து விளக்கமறியலிலும் வைக்கச் செய்தனர்.

அந்த நாட்களில் இந்த அனைத்து விடயங்களுக்கும் ஸஹ்ரானுக்கு காத்தான்குடி பொலிஸார் பாரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்பதை நான் பயமில்லாமல் கூறுவேன்.

மீண்டுமொரு ஸஹ்ரான் உருவாக காத்தான்குடியில் இடமளிக்கமாட்டேன். நாம் பாடமொன்றை கற்றுக் கொண்டோம். அவ்வாறொருவர் மீண்டும் வந்தால் பாதுகாப்பு பிரிவுக்கு மாத்திரமல்லாது, அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவோம். நான் யுத்த காலத்தில் ராணுவ புலனாய்வுப் பிரிவில் சேவை செய்தவன். இது எமது நாடு. மீண்டும் எவரேனும் இந்த நாட்டை அழிக்க வந்தால், அதனை எதிர்த்து நாமே முதலில் முன்வருவோம்.

காத்தான்குடியில் மீண்டுமொரு தற்கொலை குண்டுதாரி உருவாக நாம் இடமளியோம். அவ்வாறானவர்களை பேச்சு மற்றும் நடத்தைகள் மூலம் எம்மால் இனங்காணமுடியும்.

ஸஹ்ரான் பற்றிய அனைத்து தகவல்களையும் நாம் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கினோம். அவரது அபாயகரதன்மையை நாம் இனங்கண்டோம். தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் கடுமையான நாசகார கருத்துகள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைத்தளம் ஊடாக ஸஹ்ரான் வெளியிட்டார்.

ரி-56 ரக துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு ‘வெடிப்புகளை நிகழ்த்துவோம், இலங்கையை முழுமையாக அழிப்போம். சிங்களவர்களை தாக்குவோம்’ என்பன உள்ளிட்ட கருத்துகளை அவர் வெளியிட்டார். இதனை அனைத்து பாதுகாப்பு பிரிவுக்கும் தெரியப்படுத்தினேன்.

தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெறுவதற்கு 03 மாதத்துக்கு முன்னரும், நாட்டில் பாரிய அழிவொன்றை ஏற்படுத்துவதற்கு ஸஹ்ரான் தயாராவதாக நான் அறிவித்தேன். இவர் குருணாகல், கல்முனை ஆகிய பகுதிகளில் தலைமறைவாகியுள்ளார். உடனடியாக கைது செய்யுங்கள் என்றேன். ஊடகங்களுக்கும் தெரிவித்தேன்.

எனினும், எதுவும் பயனளிக்கவில்லை. ஸஹ்ரான் 2017ம் ஆண்டு காத்தான்குடியில் இருக்கும் வரையில் பரம ஏழையாகவே இருந்தார். தகர கொட்டகையொன்றிலேயே அவரது பள்ளிவாசலை நடத்திச் சென்றார். அவர் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியிலேயே செல்வந்தரானார். தாக்குதல் தொடர்பில் செல்வந்தரொருவரை சந்தித்த பின்னரே அவரும் செழிப்பாகியுள்ளார்.

ஸஹ்ரான் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவரது பள்ளிவாசல் பெரிதாக நிர்மாணிக்கப்படும்போது, இவருக்கு பணம் கிடைத்த வழி தொடர்பில் தேடிப்பார்க்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு கூறினேன். டுபாயிலிருந்து ஒருவர் பணம் வழங்குவதாக கூறப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தேன்.

இங்கு சவூதி அரேபியா போன்று எதுவும் மாற்றப்படவில்லை. 2008ம் ஆண்டிலேயே பேரீச்சை மரங்கள் நடப்பட்டன. ஆரம்பத்தில் பாம் (முள்ளுத்தேங்காய் அல்லது கட்டுபொல்) மரத்தையே நட எத்தனித்தோம். பின்னர், உஷ்ணம் அதிகம் என்பதால் பாம் மரங்கள் பட்டுப்போகக்கூடும், நடவேண்டாம் என விவசாய திணைக்களத்தினர் கூறினர். இப்பகுதியின் காலநிலைக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால் பேரீச்சை மரங்களை நாட்டுவதற்கு விவசாய திணைக்களத்தினர் அனுமதி வழங்கினர். வேறுமரங்களும் நடப்பட்டுள்ளன.

எமது மதத்தின் எழுத்து அரபு என்பதால் பெயர் பலகைகளில் அரபு சொற்களை பயன்படுத்தினோம். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு சொல்லும் அரபு மொழியில் எழுதப்படவில்லை. அவ்வாறு எழுதப்பட்டிருப்பின் நாம் அகற்றுவோம். எந்தவிதத்திலும் இலங்கையை அரபு மயமாக்க வேண்டிய தேவை எமக்கில்லை.

நான் ராணுவ புலனாய்வில் பணியாற்றியவன். 2017ம் ஆண்டில் குண்டுவெடிப்பினால் ஸஹ்ரானின் சகோதரன் ரில்வான் காயமடைந்ததாகத் தகவல் கிடைத்தது. இவை அனைத்தையும் 2018 ஜனவரியில் காத்தான்குடிக்கு வந்த புலனாய்வு பிரிவிடம் கூறினேன். இவர்களில் ஒருவரையாவது கைது செய்தால் பல தகவல்கள் வெளிவரும் என்றும் தொடர்ச்சியாக கூறினேன்.

எம்முடன் பேசி பழகுபவர்களே ஸஹ்ரானின் குழுவில் இருந்தனர். 2018ம் ஆண்டு டிசம்பரில் உன்னிச்சை பகுதியில் அவ்வாறான ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஸஹ்ரானின் வீடியோவை பற்றி கேட்டேன். அவருடனான உரையாடலில், இவர்கள் பாரிய அழிவொன்றை நிகழ்த்த தயாராவதை உணர்ந்தேன்.

இவ்வாறிருக்கையில் ஸஹ்ரானின் வீடியோவொன்றை கண்டேன். விரைவில் தாக்குதலொன்றுக்கு அவர்கள் தயாராவதை உணர்ந்தேன். தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் ஏப்ரல் 14ம் திகதி புலனாய்வு பிரிவுக்கு தொலைபேசியில் அறிவித்தேன்.

என்னிடம் அனுமதிப்பத்திரமுள்ள துப்பாக்கி இருக்கிறது. ஸஹ்ரானை தேடிச் சென்று சுட்டுக்கொல்கிறேன் என்றேன். இதனை கேட்ட புலனாய்வு அதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு கூறுவதாக என்னிடம் கூறினார். அவர்களில் ஒருவரையாவது கண்டுபிடித்து தாருங்கள் சுட்டுக் கொல்கிறேன். சிறை சென்றாலும் பரவாயில்லை என்று கூறினேன்” என, அந்த நேர்காணலில் நகர சபைத் தலைவர் அஸ்பர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸஹ்றான்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்