கல்முனை உப பிரதேச செயலக விவகாரம்: சாகும் வரை உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார் தேரர்

🕔 June 22, 2019

– அஹமட் –

ல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் வரை, சாகும் வரை உண்ணா விரதம் இருந்து வந்த கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி  ரன்முத்துகல சங்கரத்ன தேரர், தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.

இதனையடுத்து, அவர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு, சிகிச்சைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த உண்ணா விரதம் நடைபெற்று வந்த இடத்துக்கு இன்று காலை, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் வருகை தந்தமையினை அடுத்து, கல்முனை விகாராதிபதி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொண்டார்.

கல்முனை விகாராதிபதி கடந்த 06 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வந்துள்ளார்.

ஆயினும், அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பொருட்டு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அம்பியுலான்ஸ் வண்டி வரை, அவர் உண்ணா விரதம் இருந்த இடத்திலிருந்து, நடந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அங்கு உண்ணாவிரதம் இருந்து வந்த கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனை தவிர்ந்த ஏனைய அனைவரும், தமது சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாத்திரம், சாகும் வரை உண்ணா விரதத்தை தொடரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்