முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

🕔 June 21, 2019

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளின் போது, அவர்களின் அதிகமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகவும், முஸ்லிம்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டமைக்கு எந்தவொரு நஷ்டயீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது எனவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம். நசீர் தெரிவித்தார்.

நிகவெரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார்.

“கடந்த மாதம் இனவாத தாக்குதலுக்கு உள்ளான பல பகுதிகளை, முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுடன் நேரடியாக பார்வையிட நாம் சென்றிருந்தோம்.

முஸ்லிம்களுடைய வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டிருந்ததை அப்போது நாம் அவதானித்தோம்”.

“குருநாகல் மாவட்டத்தில் சுமார் 28 ஊர்கள் தாக்கப்பட்டன. 04 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். 130 வீடுகள் உடைக்கப்பட்டுள்ளன. 24 பள்ளிகள் உடைக்கப்பட்டுள்ளன. 127 கடைகளும் கடைகளில் இருந்த பொருட்களும் அநியாயமாக அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு சுமார் 32 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பற்றவைக்கப்பட்டுளன. அத்தோடு 26 வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதுடன் சில வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி தீவைக்கப்பட்டுள்ளன.

அரசாங்க பாடசாலை ஒன்றும் மத்ரஸா ஒன்றும் தாக்கப்பட்டுள்ளன. மேலும் ஜம்மியதுல் உலமாவின் குருநாகல் மாவட்ட கிளை தாக்கப்பட்டுள்ளது. 04 கோழி பண்ணைகள் தாக்கப்பட்டுள்ளன” என்று, இதன்போது நஸீர் கூறினார்.

“கோடிக்கணக்கான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டும், மௌனமாக பொலிஸாரும் ராணுவத்தினரும் இருந்தது போன்று, இன்று அரசாங்கமும் நஷ்டயீடுகளை வழங்கும் விடயத்தில் மௌனம் காக்கிறது.

கடந்த காலங்களில் கண்டி – திகன, அளுத்கம போன்ற இடங்களில் நடைபெற்றது போன்று, இன்றும் இந்த அரசாங்கம் நஷ்டயீட்டுத் தொகையை வழங்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதானது, இதன் பின்னணியில் அரசாங்கம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்துகிறது.

கடந்த தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக முஸ்லிம் மக்களில் அநேகமானவர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால் வாக்குகளை பெற்ற பின்னர் அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மறந்து நடப்பது எதிர்காலங்களில் அவர்களுடைய அரசியலை கேள்விக்குறியாக்கும் என்பதனை மறந்துவிடக்கூடாது” என்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்