அரபு எழுத்துக்களை அகற்றக் கோரினால், சட்ட நடவடிக்கை எடுப்போம்: காத்தான்குடி நகரசபை அதிரடித் தீர்மானம்

🕔 June 20, 2019

– மப்றூக் –

ரபு எழுத்துக்களைக் கொண்ட பெயர்ப் பலகைகளை பொலிஸார் அகற்றி வரும் நிலையில், காத்தான்குடியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள அரபு எழுத்துக்களைக் கொண்ட பெயர்ப்பலகைகளை அகற்றுமாறு, தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமாயின், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதென, காத்தான்குடி நகரசபை அமர்வில் இன்று வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றபபட்டுள்ளது.

காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச். அஸ்பர் தலைமையில் இன்று நடைபெற்ற சபை அமர்விலேயே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது குறித்து பேசிய காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர்; “காத்தான்குடியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபுஎழுத்துக்களை அகற்றுமாறு கோரி , இது வரை எவரிடமிருந்தும் உத்தியோக பூர்வமான உத்தரவுகள் எமக்குக் கிடைக்கவில்லை. அவ்வாறு உத்தரவிடுவது அரசியலமைப்புக்கு முரணானதாகும். எனவே, அவ்வாறான உத்தரவுகள் கிடைக்கப்பெற்றால், அதற்கு எதிராக எமது சபை  நீதிமன்றத்தை நாடும். ” என்று கூறினார்.

எவ்வாறாயினும், காத்தான்குடியிலுள்ள 14 இடங்களைக் குறிப்பிட்டு, அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு எழுத்துக்களை அகற்றுமாறு, காத்தான்குடி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தமக்கு பட்டியலொன்றினை அனுப்பி வைத்ததாகவும் நகரசபைத் தலைவர் அஸ்பர் தெரிவித்தார்.

இதனையடுத்து, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை தான் தொடர்பு கொண்டு, எந்த சட்டத்தின் கீழ், அரபு எழுத்துக்களை அகற்ற வேண்டும் எனத் தெரிவித்து, தமக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்குமாறு கேட்டதாகவும், ஆனால் அவ்வாறான உத்தியோகபூர்வ கடிதத்தினை காத்தான்குடி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி இதுவரை தமக்கு அனுப்பவில்லை எனவும் நகரசபைத் தலைவர் குறிப்பிட்டார்.

காத்தான்குடியின் பிரதான சாலையில் ஈச்சை மரங்கள் நடப்பட்டுள்ளமை குறித்தும், அங்குள்ள பெயர்ப் பலகைகளில் அரபு மொழி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் காத்தான்குடியை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அரபு மயப்படுத்தி விட்டார் எனவும்  எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஈஸ்டர் தின தாக்குதல்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறியும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினர் அண்மையில், காத்தான்குடியைச் சேர்ந்த ஹிஸ்புலாவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இந்த நிலையிலேயே, காத்தான்குடி நகரசபை இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், பொலிஸாரின் உத்தரவுக்கிணங்க, அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு வளைவில் இருந்த அரபு எழுத்துக்களை, அக்கரைப்பற்று மாநகரசபையினர் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்