நீதிமன்றக் கூண்டில் இறுதி மூச்சை விட்ட எகிப்தின் முன்னாள் தலைவர்: யார் இந்த முர்ஷி
ராணுவத்தால் 2013ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அதிபர் முகமத் முர்ஷி நீதிமன்றத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள உளவு பார்த்த குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போது அவர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு வயது 67.
அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன
தற்போது தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமியவாத இயக்கமான ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’டின் தலைவராக இருந்த முர்ஷி , உளவு பார்த்த குற்றச்சாட்டுக்கான குற்ற விசாரணைக் கூண்டிலிருந்து பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.
இந்த நிலையில்,`தி முஸ்லிம் பிரதர்ஹுட்` இயக்கம் இது ஒரு “கொலை” என தெரிவித்துள்ளது.
மோர்சிக்கு இருந்த தீவிர உடல்நல பிரச்சனைகளான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தொடர்ந்து தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்றும் செயற்பாட்டாளர்கள் மற்றும் மோர்சியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றமத்தில் என்ன நடந்தது?
உளவு பார்த்த குற்றம் சுமத்தப்பட்டிருந்த மோர்சி, பாலத்தீன இஸ்லாமியவாத குழுவான ஹமாஸுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்பு ஹமாஸ் குழுவுடன் தொடர்பு வைத்திருந்தது.
மோர்சி, வெளியில் எங்கும் சத்தம் கேட்காதவாறு வடிவமைக்கப்பட்ட அறையில் ஐந்து நிமிடங்கள் பேசினார். அவர் விசாரணையில் குறுக்கீடு செய்யாமல் இருக்க அவ்வாறு வடிவமைக்கப்பட்ட அறையில் பேசவைக்கப்பட்டார் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் மயங்கி விழுந்த முர்ஷி , மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி மாலை 4.50 மணிக்கு உயிரிழந்தார்.
அவர் உடலில் எந்த காயமும் இல்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அவரை சந்திக்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை எனவும், அவரின் உடல்நிலை குறித்து தங்களுக்கு பெரிதும் தெரியவில்லை என்றும் முர்ஷி யின் குடும்பத்தினர் கடந்த மாதம் தெரிவித்தனர்.
அவர் சிறையில் இருந்த சமயத்தில், உறவினர்கள் அவரை மூன்று முறை மட்டுமே காண அனுமதிக்கப்பட்டனர் என்றும், அவர் வழக்கறிஞர்களை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
மோர்சியின் உடலை எங்கு வைத்திருக்கிறார்கள் என்று தனக்கு தெரியாது என்றும், அவரின் உடலை, ஷர்கியாவில் இருக்கும் நைல் டெல்டா மாகாணத்தில் உள்ள தங்களின் சொந்த இடத்தில் புதைக்க அனுமதி மறுக்கின்றனர் எனவும் முர்ஷி யின் மகன் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு எகிப்தின் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபரானார் முர்ஷி .
மூன்று வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் மோர்சிக்கு 45 வருடங்களுக்கும் மேலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சட்டவிரோத குழுவுக்கு தலைமையேற்றது, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து துன்புறுத்தியது, நாட்டின் ரகசியங்களை கசியவிட்டது போன்ற குற்றச்சாட்டுகள் முர்ஷி யின் மீது உள்ளன.
இந்த விசாரணை அரசியல் காரணங்களால் மேற்கொள்ளப்பட்டன என்று மோர்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்து வந்தனர். மேலும் நம்பத்தகுந்த சாட்சியங்கள் மற்றும் போதுமான ஆதாரங்கள் இல்லாமல் நடந்த ஒரு ஆட்சிக்கவிழ்ப்பை, சட்டபூர்வமானதாக்க பார்க்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து வந்தனர்.
தி முஸ்லிம் பிரதர்ஹுட்டின் அரசியல் கிளையான சுதந்திரம் மற்றும் நீதிக்கட்சி, “இது ஒரு கொலை” என்றும் முர்ஷி யின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் உள்ள எகிப்திய தூதரகத்துக்கு முன்பாக ஒன்றுகூட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இவரின் கூட்டாளியான துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், மோர்சி உயிரிழந்ததற்கு எகிப்தின் “சர்வாதிகாரிகளே” காரணம் என தெரிவித்துள்ளார்.
மற்றொரு கூட்டாளியான கத்தாரின் அரசர் ஷேக்-தமிம்-பின்-ஹமத்-அல்-தனி முர்ஷியின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
‘ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்’ அமைப்பின் மத்திய கிழக்கு இயக்குநர் இது “மிகவும் மோசமானது ஆனால் எதிர்பார்க்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
யார் இந்த முர்ஷி
எல் அட்வா என்னும் கிராமத்தில் 1951ஆம் ஆண்டு பிறந்த முர்ஷி , 1970களில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியல் படிப்பை முடித்தார். அதன்பின் முனைவர் பட்ட ஆய்வுக்காக அமெரிக்கா சென்றார்.
‘தி முஸ்லிம் பிரதர்ஹுட்’டின் அதிபர் வேட்பாளராக 2012ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட முர்ஷி , வலுக்கட்டாயமாக ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார். அவரின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமியவாத சதித்திட்டம் தீட்டியதாகவும், பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
அவர் பதயேற்று ஒராண்டு காலத்தில் அவரின் அரசுக்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் எகிப்து வீதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்கள் கழித்து, ராணுவம் அரசை கலைத்தது. இடைக்கால அரசு ஒன்றை அறிவித்து முர்ஷியை கைது செய்தது. இதனை ஆட்சிக் கவிழ்ப்பு சதி என மோர்சி தெரிவித்தார்.
அப்போதைய ராணுவ தலைமை அதிகாரியாக இருந்த அப்துல் ஃப்ட்டா அல்-சிசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் கடந்த வருடம் அவர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மனித உரிமை அமைப்புகள் அதை கடுமையாக விமர்சித்தன.
முர்ஷி பதவியிலிருந்து இறக்கப்பட்டதும், அவரின் ஆதரவாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். அது அனைத்தும் மனித உரிமை மீறல் செயல்கள் என்று கூறப்படுகிறது.