ஈஸ்டர் தினத் தாக்குதல்: துபாயில் கைது செய்யப்பட்ட ஐவர், இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர்
ஈஸ்டர் தினத் தாக்குதல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துபாயில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் நாட்டுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை 04 மணிக்கு சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தினத் தாக்குதல் சம்பவத்திற்கு திட்டம் தீட்டிய மிக முக்கிய சந்தேக நபராக கருதப்படும் மொஹமட் மில்ஹானும் இவர்களில் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து துபாய் நோக்கி பயணித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், குறித்த சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்கள், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வசமிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்பு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆகியவற்றின் பொறுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த பின்னணியிலேயே, சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த ஐந்து சந்தேகநபர்கள் துபாயிலிருந்து இன்று அழைத்து வரப்பட்டுள்ளனர்.