சஹ்ரானுடனுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்புகள் இருந்தன: ஆசாத் சாலி சாட்சியம்

🕔 June 11, 2019

நாடாளுமன்ற தேர்தல் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிற்கு, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், நிபந்தனைகளுடனான உடன்படிக்கையின் பிரகாரம் உதவிகளை வழங்கியதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளித்த போதே, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி இதனைக் கூறினார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் காலப் பகுதிகளில், தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கே தாம் உதவிகளை வழங்குவதாக, தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளுக்கு அழுத்தங்களை கொடுக்கும் அளவிற்கு மொஹமட் சஹ்ரானுக்கு அதிகாரங்கள் எங்கிருந்து கிடைத்தது என, இதன்போது குறிக்கிட்டு தெரிவுக்குழு உறுப்பினர்கள், ஆசாத் சாலியிடம் கேள்வி எழுப்பினார்கள்.

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மொஹமட் சஹ்ரான், மக்களை அச்சுறுத்தி தனது ஆளுகைக்குள் வைத்திருந்ததாக, அவர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

தன்னுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாத்திரமே, தேர்தல் காலப் பகுதியில் தான் உதவிகளை வழங்குவதாக அவர் கூறி வந்த பின்னணியிலேயே, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, மொஹமட் சஹ்ரானுடன் உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக் கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மொஹமட் சஹ்ரான், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்தி வந்துள்ளதாகவும், அதனால் சஹாரானின் பேச்சுக்களுக்கு அந்த பகுதி மக்கள் செவி மடுத்து வந்துள்ளதாகவும் ஆசாத் சாலி குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மாத்திரமன்றி, மேலும் பல முஸ்லிம் அரசியல்வாதிகளும் மொஹமட் சஹ்ரானுடன் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக மொஹமட் சஹ்ரானுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் காணப்படும் விடயங்கள் என்னவென இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தமது தேர்தல் பிரசாரங்களின் போது, பட்டாசுகளை கொளுத்த கூடாது, பாடல்கள் ஒலிபரப்பப்பட கூடாது உள்ளிட்ட சில விடயங்கள் அந்த உடன்படிக்கையில் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்