‘காவி’ அரசியல்
– முகம்மது தம்பி மரைக்கார் –
முஸ்லிம்கள் மீது இனவாதிகள், எந்தளவு குரோதத்துடன் இருந்துள்ளனர் என்பதை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களின் பின்னர், மிகத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறது. முஸ்லிம்களின் ஆடைகள் தொடக்கம், அரபு மொழி வரையிலும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை வைத்தே, அந்தக் குரோதத்தை அளவிட முடியும். ‘பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை’ எனும் பெயரில் அரங்கேறும் சில செயற்பாடுகள் கோமாளித்தனமானவையாக உள்ளன.
முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, இனவாதிகளுக்கு இருந்து வந்த ஆத்திரத்தை, ஈஸ்டர் தினத் தாக்குதல்களைக் காரணமாக வைத்து, தீர்க்க நினைக்கின்றமை, மிகப்பெரும் அயோக்கியத்தனமாகும். ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அஸாத் சாலி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்று, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணாவிரதம் இருந்தமை, ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட மிகப்பெரும் சவாலாகும்.
‘காவி’களின் காலடியில்தான் நாட்டின் நிர்வாகம் இன்னும் கிடக்கிறது என்பதற்கு, ரத்ன தேரரின் உண்ணாவிரதமும், அதைத் தொடர்ந்து இடம்பெற்ற முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமாவும் மிகப்பெரும் உதாரணங்களாகும்.
இன்னொரு புறம், முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமா பற்றிய விமர்சனங்களும் மக்கள் மத்தியில் உள்ளன. ரிஷாட் பதியுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும், அவரின் பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்களும், ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்பட்டு வந்த தாக்குதல்களின் வேறொரு வடிவம் என்பதால்தான், ஒட்டுமொத்த முஸ்லிம் அமைச்சர்களும் ராஜிநாமா செய்தார்கள் என்கிற பேச்சு அதிகளவில் உள்ளது.
ஆனால், ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தை நீர்த்துப் போகச் செய்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீட்டிய திட்டத்தின் அடிப்படையில்தான், முஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாறு கூட்டாக ராஜிநாமாச் செய்தார்கள் என்கிற சந்தேகங்களும் அரசியலரங்கில் உள்ளன.
காரணம், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம், ரணிலுடைய ‘நண்பர்’ ரவூப் ஹக்கீம் போன்றோர், பிரதமரின் ஆசீர்வாதமின்றி, தமது பதவிகளைத் துறந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் அந்தச் சந்தேகங்களுக்குக் காரணமாகும்.
எவ்வாறாயினும், முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமாவானது, இனவாதிகள் எதிர்பாராததொரு திருப்பமாகவே அமைந்தது. முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமா அறிவிப்பானது, இனவாதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவு வழங்கியோருக்கும் அதிர்ச்சியான செய்தியாகவே இருந்தது என்பதை, அவர்களின் எதிர்வினைகளை வைத்துப் புரிந்து கொள்ள முடிந்தது.
உதாரணமாக, அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்த பௌத்த மகாநாயக்க பீடங்கள், முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு ராஜிநாமாவின் பின்னர், திடீரென இறங்கி வந்து, “ராஜிநாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள், தங்களின் பதவிகளைப் பொறுப்பேற்க வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்தமையின் மூலம், ‘கூட்டு இராஜினாமா’ நடவடிக்கை ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சி, எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இன்னொரு புறம், குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் ராஜினாமாச் செய்த முஸ்லிம் அமைச்சர்கள், தாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபித்த பின்னர், தமது அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று, மகாநாயக்க பீடத்தினர் இதன்போது முன்வைத்த நிபந்தனையானது, எங்குமில்லாத புதுவகை நியாயமாகும்.
யாராவது ஒருவர், யாராவது இன்னொருவர் மீது குற்றமொன்றை சுமத்துவாராக இருந்தால், குற்றம் சாட்டியவர்தான், குற்றம் சாட்டப்பட்டவர் புரிந்ததாகக் கூறப்படும் குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அதுதான் நீதி; அதுதான் உலக வழக்கம்.
குற்றம் சாட்டியவர் முறையாகவும், சாட்சி, சான்றுகளின் அடிப்படையிலும் தனது குற்றச்சாட்டை நிரூபிக்கும் போதுதான், குற்றம் சாட்டப்பட்டவர் அதனை மறுத்து, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முயற்சிப்பார்.
ஆனால், மகா சங்கத்தினரின் கூற்று இதற்கு மறுதலையாகவே உள்ளது.
உதாரணமாக, ரிஷாட் பதியுதீன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, அவர் தொடர்ச்சியாக மறுத்தே வருகின்றார். தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை முறையாக நிரூபிக்குமாறும், குற்றம் சாட்டுகின்றவர்களிடம் அவர் கோரி வருகின்றார். “என் மீதான குற்றம் முறையாக நிரூபிக்கப்படுமானால், அரசியலை விட்டும் நான் ஒதுங்கி விடுவேன்; மரண தண்டனை தந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்குப் பிறகும், “நாங்கள் உன்மீது குற்றம் சாட்டிக் கொண்டேயிருப்போம். ஆனால், நீதான் உன்னைச் சுற்றவாளி என்று நிரூபிக்க வேண்டும்” என்று, இனவாதிகளும் அவர்களுக்கு ஆதரவானவர்களும் கூறிக் கொண்டேயிருப்பது எரிச்சலடைய வைக்கும் கோசமாகும்.
இலங்கையில் முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையொன்று, சுதந்திரத்துக்குப் பின்னர் இருந்ததில்லை எனக் கூறப்படுகிறது. இலங்கை அமைச்சரவையிலிருந்து முஸ்லிம்கள் கூட்டாக ராஜினாமாச் செய்தமையானது, இலங்கை மீது முஸ்லிம் நாடுகளுக்கு அதிருப்தியை நிச்சயமாக ஏற்படுத்தி இருக்கும்.
இவ்வாறானதொரு நிலை இலங்கைக்கு நல்லதல்ல. இஸ்ஸாமிய நாடுகள் வழங்கும் நிதி உதவிகள் மூலம், இலங்கையில் ஏராளமான அபிவிருத்தித் திட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றினை முஸ்லிம் நாடுகள் நிறுத்தி விடுவது, இலங்கைக்கு மிகப்பெரும் ஆபத்தாக அமைந்து விடும்.
உதாரணமாக, இலங்கைக்கு முஸ்லிம் நாடுகள் வழங்கி வரும் உதவிகளில் சிலவற்றை மட்டும், தனது உரையொன்றில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அண்மையில் தெரிவித்திருந்தார். அவையாவன:
1. இலங்கைக்கு, ஈரான் ஆறு மாதக் கடன் அடிப்படையில் எண்ணெய் வழங்கி வருகிறது.
2. பதுளை – செங்கலடி நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கு சவூதி அரேபியா 2,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
3. மட்டக்களப்பிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு 200 கோடி ரூபாவை குவைத் அரசு வழங்கியுள்ளது என்று தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், “இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளில், இஸ்லாமிய நாடுகள் இரண்டாம் இடத்தில் உள்ளன” என்ற தகவலையும் கூறினார்.
இலங்கை முஸ்லிம்களை வஞ்சிப்பதாக நினைத்துக் கொண்டு, அரபு மொழி மீதும் இனவாதிகள் தமது கோபத்தை காட்டிக் கொண்டிருப்பது, முட்டாள்தனமான செயற்பாடாகும். உலகின் மிகப்பெரும் மொழிகளில் அரபும் ஒன்றாகும். 21 நாடுகளில் ஆட்சி மொழியாக அரபு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகளில் அரபும் ஒன்றாகும்.
முஸ்லிம்கள் இறைவேதமாக நம்புகின்ற புனித குரான், அரபு மொழியில் உள்ளமையால், அதனை ஓதுவதற்கும் விளங்கிக் கொள்வதற்குமாக, பிற மொழியைப் பேசுகின்ற முஸ்லிம்கள், அரபு மொழியைக் கற்கின்றனர்.
மறுபுறமாக, இலங்கையில் முஸ்லிம் நாடுகள் வழங்கிய நன்கொடையின் கீழ், ஓர் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்படும் போது, நிதி வழங்கிய நாட்டினர் புரிந்து கொள்ளும் அரபு மொழியில், அந்தத் திட்டம் பற்றிய குறிப்புகளை அறிவிப்புப் பதாதைகளில், கல்வெட்டுகளில் தெரியப்படுத்துவதுதான் நியாயமானதாகும். அநேகமாக அப்படித்தான் இதுவரை நடந்து வந்தது.சீன அரசாங்கத்தின் திட்டங்கள் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் போது, அவை தொடர்பான கல்வெட்டுகளில் சீன மொழி இடம்பெற்றுள்ளமையைக் கண்டுள்ளோம்.
ஆனால், இப்போது பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரபு எழுத்துகள் அனைத்தையும் அகற்றுவதற்கு அரசாங்கமே உத்தரவு பிறப்பித்திருப்பது பெரும் மடமையாகும்.
பேரினவாதிகள் சொல்லுகின்ற ‘இஸ்லாமிய பயங்கரவாதத்தை’ ஒழிப்பதற்காக, அரபு மொழியை நாட்டிலிருந்து அகற்றுவதென்பது, அறியாமையின் உச்சமாகும். அது, ‘சீப்பை ஒளித்து வைப்பதன் மூலம், திருமணத்தை நிறுத்தி விடலாம்’ என்று நினைக்கும் மடமைக்கு ஒப்பானதாகும்.
குர்ஆன் பிரதிகளை வைத்திருந்தவர்களைப் படையினர் கைது செய்தமை, தமது வாகனங்களில் அரபு மொழியில் எழுதப்பட்ட நல்வாசங்களைக் காட்சிப்படுத்தியவர்கள் அச்சுறுத்தப்பட்டமை போன்ற சம்பவங்கள், அரபு மொழியிடமிருந்து இலங்கை முஸ்லிம்களை தூரப்படுத்துவதற்கான உளவியல் தந்திரமாகும். ஆனால், அந்தத் தந்திரம் ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பதற்கு, ஏராளமான காரணங்களைக் கூற முடியும்.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் பற்றி, ஜனாதிபதிக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டமையை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டோர் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் வழங்கியுள்ள சாட்சியங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி சென்றிருந்த சந்தர்ப்பங்களில்தான் ஈஸ்டர் தினத் தாக்குதல்களும், அதற்குப் பின்னர் முஸ்லிம் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும் இடம்பெற்றுள்ளமை, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆட்சியாளர்களின் ஆசீர்வாதங்களுடன்தான் ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் நடந்துள்ளனவா என்கிற கேள்விகள் சாதாரண பொதுமக்களிடமும் ஏற்படத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் பற்றிய உண்மைகளை வெளிக் கொண்டுவரும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை உடனடியாக நிறுத்தும்படி ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பது மக்களிடையே இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் என்பது, ‘வேலியே பயிரை மேய்ந்த கதை’யாக இருக்குமோ என்கிற சந்தேகம்தான் அதுவாகும்.
இந்தக் கூத்துகளையெல்லாம் காணுகின்ற முஸ்லிம் மக்கள், ‘ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தியதில், நாங்கள் தவறிழைத்து விட்டோம்’ என்று, புலம்பத் தொடங்கியுள்ளனர்.
நன்றி தமிழ் மிரர் பத்திரிகை (11 ஜுன் 2019)